இலங்கையில் அமைந்துள்ள ஆலயத்தில் ஆய்வுகளை நடத்த கோரிக்கை

இலங்கையில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழகத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார். சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் இலங்கையில் உள்ள பழமையான இந்த கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

இலங்கையை 78 ஆண்டுகளுக்கும் மேலாக சோழ மன்னர்கள் ஆண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எடகடே என்ற கிராமத்தில் 1009 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் கட்டிய உத்தம சோளீஸ்வரன் உடைய மகாதேவர் கோயில் அமைந்துள்ளதாக மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ள அந்த கிராமத்தின் சரியான அடையாளத்தை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் அந்த கோயிலை 1912-ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. வரலாற்று பொக்கிஷமாக இருக்கும் இந்த கோயிலில் மிகப்பெரிய கருங்கல் தூண் ஒன்றும் உள்ளது. அதில் உள்ள தமிழின் பழமையான வட்டெழுத்துகள் ராஜராஜ சோழனின் 78 ஆண்டுகால ஆட்சியை குறிப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் 21 ஏக்கர் நிலம் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டு அதின் வருமானத்தைக் கொண்டு கோயிலை பராமரிக்க வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். எனினும் சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததை குறிக்கும் பழமையான கருங்கல் தூண் பற்றிய தகவல் இந்திய தொல்லியல் துறைக்கு தெரியவில்லை என்று மாணிக்கவேல் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தமிழக தொல்லியல் துறையும் மத்திய கலாசாரத்துறையும் இலங்கை அரசுடன் கலந்துரையாடி, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பொன் மாணிக்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews