எரிபொருள் விநியோகிக்காததால் காரைநகர் வலந்தலை சந்தியை முடக்கி போராட்டம்!

காரைநகர் – வலந்தலை சந்தியை முடக்கி பொது மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலந்தலை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் பம் நேற்றையதினம் பழுதுபட்டது. ஆகையால் அந்த பம்மினை திருத்தம் செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையம் முயற்சிக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

எரிபெருளை பெறுவதற்கு நாங்கள் 5 நாட்களுக்கும் மேலாக வரிசையில் வந்து காத்திருக்கின்றோம். ஆனால் நேற்று (06) காலை எரிபொருள் நிரப்பும் பம் பழுதாகிவிட்டதாக கூறி எரிபொருள் நிரப்புவதனை இடை நிறுத்தினார்கள். ஆனால் அந்த பம்மினை திருத்துவதற்கு ஏற்பாடு செய்யவில்லை.

நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் வரிசையில் காத்திருக்கின்றோம். எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் இந்த பொறுப்பற்ற செயற்பாடு எமக்கு வருத்தமளிக்கின்றது.

எமக்கான தீர்வு என்ன எனக் கூறினால் தான் நாங்கள் பாதை முடக்கத்தினை நீக்குவோம்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கூறுகையில்,

பழுதடைந்த பம்பினை திருத்தம் செய்யும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் புத்தளத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றார். அவர் வந்ததும் பம்பினை திருத்தம் செய்துவிட்டு நாளை காலை (8) 6 மணிக்கு எரிபொருள் வழங்க ஆரம்பிப்போம். தற்போது வரிசையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் டோக்கன் விநியோகிப்போம்.

அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாவுக்கும் பெற்றோல் அடிப்பதாகவும், டீசல் வாகனங்கள் அனைத்திற்கும் 7500 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து வீதி முடக்கலை மக்கள் கை விட்டனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews