தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இது தொடர்பாக விக்டர்ஞவன் போன்ற சிங்களக் கல்வியாளர்களின் ஆலோசனையின் பேரில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுடன் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனும் பங்குபற்றியிருந்தார்.
இரண்டாவது கலந்துரையாடலில் கடந்த 05ம் திகதி பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனப் பாராளுமன்றக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன பங்குபற்றியிருந்தன. இக் கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரது ஆலோசனைகளை ஒன்றிணைத்து ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கலந்துரையாடல்களில் தமிழ் மக்கள் சார்பில் பங்குபற்றிய விக்கினேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எத்தகைய ஆலோசனைகளை முன்வைத்தார்கள் எனத் தெரியவில்லை. இது பற்றி கட்சிக்குள்ளேயோ வெளியேயோ எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
தற்போதைய நெருக்கடி என்பது பெரும்தேசியவாதத்தின் லிபரல்பிரிவு, பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார் அரசியல்காரரான இந்தியா, பூகோள அரசியல் காரர்களான அமெரிக்கா, சீனா என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதலினால் ஏற்பட்டதாகும்.
நெருக்கடிக்கான தீர்வு என்பது சம்பந்தப்பட்ட ஐந்து தரப்பினரதும் நலன்கள் சந்திக்கின்ற புள்ளியாகும். எனவே இந்த நெருக்கடி மைதானத்தில் தமிழ் மக்களுக்கும் தவிர்க்கப்பட முடியாத கௌரவமான இடம் இருக்கின்றது. தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும். தமிழ் அரசியல் கட்சிகள் இந்த உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எனவே நெருக்கடித் தீர்வு முயற்சியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கௌரவமாக முன்வைப்பதற்கு தமிழ்க் கட்சிகள் தயங்கக் கூடாது.
சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளை அரசாங்கத்தின் மீது விதித்துள்ளது. அதில் ஒன்று இராணுவத்தின் ஆளனியைக் குறைக்க வேண்டும் என்பதாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இராணுவத்தின் ஆளனியைக் குறைக்க முடியாது தவிர நாட்டின் ஸ்திரமான நிலையையும் கோரியுள்ளது. அதற்கும் கூட இனப்பிச்சினைக்கான தீர்வு நிபந்தனையாக உள்ளது.
சர்வதேச சக்திகள் நல்லாட்சிக் காலம் போல தமிழ் மக்களின் தலைமையை பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு தங்கள் நலன்களில் இருந்து இந்தத்தடவை விளையாட முடியாது. முன்னரைப் போல மொத்த வியாபாரம் செய்யும் நிலையில் கூட்டமைப்பு இல்லை. தமிழ் மக்களின் நேர்முக, மறைமுக ஆணைகள் அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், புலம் பெயர் சமூகம் என பலரிடம் பிரிந்து இருக்கின்றது. எனவே நல்லாட்சிக் காலம் போல கூட்டமைப்பினர் மொத்த வியாபாரம் செய்ய முடியாது. புலம்பெயர் மக்கள் தவிர்க்கப்பட முடியாத சக்திகளாக வளர்ச்சியடைந்துள்ளனர். சுமந்திரன் தொடர்ச்சியாக தோல்வியடைவது இங்கேதான். இன்று கடும் அழுத்தங்களினால் அரசாங்கத்தின் 21வது திருத்தத்தையும் கூட  ஆதரிக்க முடியாத நிலையில் உள்ளனர். 21வது திருத்தம் தமிழ்த் தேசிய கரிசனைகள் பற்றி அக்கறை கொள்ளவில்லை. நாம் எப்படி ஆதரிப்பது என சுமந்திரன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இத்தனைக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்காக இவர் தயாரித்த 21வது திருத்தத்தில் தமிழ்த் தேசியக் கரிசனைகள் இருக்கின்றதா? என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
13வது திருத்தத்தை திணிக்கும் கருமங்களும் வெற்றியளிக்கப் போவதில்லை. தமிழ் மக்கள் அதனையும் கடந்து கொண்டிருக்கின்றனர். வலுவான தீர்விற்கான களச்சூழல் கனிந்துகொண்டு வருகின்றபோது 13வது திருத்தத்திற்குள் விவகாரத்தை முடக்க தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல. அண்மையில் தமிழகத்தில் இருந்து வந்த தமிழக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 13வது திருத்தத்தை நிறைவேற்றும்படி தமிழ்த் தலைவர்கள் இந்திய மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதால் 13க்கு மேலான தீர்விற்கு தங்களால் அழுத்தம் கொடுக்க முடியாத நிலை இருக்கின்றது என்றும் கூறியிருந்தனர். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ்நாட்டு மாணவர் அமைப்பு தமிழ்நாட்டுக்கு வெளியே ஏனைய மாநிலங்களுக்கும் ஈழத் தமிழர் விவகாரத்தை கொண்டு செல்வதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர். எனவே தமிழகத்திலும், உலகில் ஏனைய நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்கின்ற தரப்பினரையும் பலப்படுத்துவதற்கு 13வது திருத்தத்திலிருந்து வெளியே வரவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
தமிழகத்திலிருந்து வந்த மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களால் துணைப் பாத்திரத்தை மட்டுமே வகிக்க முடியும் என்றும் பிரதான பாத்திரத்தை தாயக மக்களே வகிக்கவேண்டும் என்றும் கூறியிருந்தனர். தாயகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தான் தங்களினாலும் போராட்டங்களை நடாத்த முடியும்; என்றும் கூறியிருந்தனர். இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.


தென்னிலங்கையில் செயற்படும் எதிர்க்கட்சிகளின் அணி ஏதோ ஒரு வகையில் தமிழ்த் தரப்பையும் சர்வகட்சி அரசாங்கச் செயற்பாட்டில் பங்குபற்றச் செய்யவே முயற்சிக்கின்றது. ஆனால் அவர்களின் பெரும்பான்மை வெற்றுக் காசோலையில் கையெழுத்துப் பெறவே விரும்புகின்றது. சிறிய பிரிவினர் தற்போதுள்ள 13வது திருத்தத்தை தமிழ் மக்களின் தலையில் கட்டிவிடுவதன் மூலம் நிலைமையை சமாளிக்க முயல்கின்றன்
தமிழ் மக்களின் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய சமஸ்டி என்பவற்றை பேசுவதற்கு அவர்கள் இன்னமும் தயாராகவில்லை. சர்வதேச தரப்புகளும் வலுவான கோரிக்கைகளை வைக்காமல் சிங்கள தரப்போடு இணைந்து செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றது. அண்மையில் சுவிஸ்லாந்து அரசின் பேரில் அழைக்கப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளிடமும் மறைமுகமாக இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ்ப் பிரதிநிதிகள் அதற்கு இணங்கவில்லை.


இன்று சிங்கள தரப்பும், சர்வதேச சக்திகளும் பெரும் பொறிக்குள் மாட்டுப்பட்டுள்ளனர். தமிழ் மக்களினதும் பங்களிப்பு இல்லாமல் இந்த நெருக்கடியை தீர்;க்க முடியாது என்பதே அந்தப் பொறிமுறை. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பு அவதானமாக கையாள வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை அண்மைய காலத்திற்கு சந்தர்ப்பங்கள் வருவதற்கான காலங்கள் குறைவு.
எனவே சர்வகட்சி அரசாங்கம் முயற்சிகளின் போது தமிழ்த் தரப்பு தங்கள் பக்க கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க வேண்டும். இது தொடர்பாக மூன்று வகையான செயல்திட்டங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.


ஒன்று தமிழ்த் தரப்பின் பங்களிப்பைப் பெறுவதற்கு சிங்களத்தரப்பு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் சந்திக்கின்ற உடனடி நெருக்கடிகளுக்கு வலுவான உத்தரவாதங்களைத் தரவேண்டும். சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். நிலைமாறுகால நீதிக் கோட்பாட்டிற்கு இணங்க காணாமல் போனோர் விவகாரம், உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் என்பன தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவர்களுக்கான இழப்பீடு தீர்மானிக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படல் வேண்டும். முன்னைய 6000ஃஸ்ரீ போதுமானதல்ல. இது விடயத்தில் இன்றைய விலைவாசிய உயர்வு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிப்பதோடு 2009 க்கு பின்னர் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் அகற்றப்படல் வேண்டும். தொல்லியல் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.


இரண்டாவது அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு சமூக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல் வேண்டும். அதில் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுயநிர்ண சமஸ்டிப் பொறிமுறை அங்கீகாரம் என்பன ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இதற்கான அரசியல் யாப்புச் சட்ட வடிவம் ஆறுமாதங்களுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்.
மூன்றாவது அரசியல் தீர்வு வரும் வரை இடைக்கால நிர்வாகம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அந்த நிர்வாகத்திற்கு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் உட்பட தமிழ் மக்களின் விவகாரங்களை கவனிப்பதற்கான சுயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும்.
எல்லாவற்றிலும் முக்கியம் இந்த மூன்று செயல் திட்டங்களுக்குமான ஒப்புதல் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் வழங்கப்படல் வேண்டும்.


இந்த செயல் திட்டங்களை எதிர்க்கட்சிகள் தரப்பு ஏற்காவிட்டால் சர்வகட்சி அரசாங்க முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்பு எந்த பங்களிப்புகளையும் வழங்கக் கூடாது. அந்த முயற்சிகளில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் இதனை மீறி தமிழ் தேசியக் கட்சிகள் செயற்படுமாக இருந்தால் அவர்கள் முழுமையாக மக்கள் முன் அம்பலப்படுத்தப்படுவர்.

Recommended For You

About the Author: Editor Elukainews