வடக்கு சட்டத்தரணிகள் கிரிக்கெட் அணி- வடக்கு வைத்தியர் அணியினருக்குமிடையிலான துடுப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் அணி வெற்றி.

சட்டத்தரணிகள் அணிக்கு நீதிபதி அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களும்,வைத்தியர் அணிக்கு புற்றுநோய் சத்திரசிசிச்சை நிபுணர் கணேசமூர்த்தி சிறிதரன் அவர்களும் தலைமை தாங்கினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இப்போட்டியில் வைத்தியர் அணி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 35 பந்து பரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 206 ஓட்டங்களை வைத்தியர் அணி பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் அணித்தலைவர் வைத்தியர் கணேசமூர்த்தி சிறிதரன் 39 ஓட்டங்களையும்,வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் சட்டத்தரணிகள் அணி சார்பில் சட்டத்தரணி த.அஞ்சனன் 3 விக்கெட்டுக்களையும் சட்டத்தரணி இராசையா இளங்குமரன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு 207 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சட்டத்தரணிகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 20.3 பந்து பரிமாற்றங்களில் 207 ஓட்டங்களை பெற்று மிக இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அதிரடியாக 72 ஓட்டங்களையும் சட்டத்தரணி த. அஞ்சனன் அபாரமாக 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் வைத்தியர் அணி சார்பில் வைத்தியர் கௌரிபாகன் 2 விக்கெட்டுக்களையும், வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாகவும் சிறந்த பந்துவீச்சாளராகவும் சகல துறைகளிலும் பிரகாசித்த சட்டத்தரணி த. அஞ்சனன் அவர்களும் சிறந்த களத்தடுப்பாளராக வைத்தியர் ரஜீவ் நிர்மலசிங்கம் அவர்களும் சிறந்த துடுப்பாட்ட வீரராக வி. மணிவண்ணணும் தெரிவு செய்யப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews