சஜித்திற்கு விதிக்கப்பட்ட தடை….!

கொழும்பில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இதன் காரணமாகக் கொழும்பு துறைமுக காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை  பதற்றமான சூழல்  ஏற்பட்டிருந்தது.

கடந்த 24 வருடங்களாக இருந்து வருகின்ற சம்பள அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வைக் கோரி இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் கொழும்பில் நேற்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றையும், வாகன பேரணியையும் நடத்தியிருந்தனர். இந்த போராட்டத்தின் இறுதியில் காலி முகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் முற்றுகைப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.

அவ்வேளை அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் 44 பேரைக் கைது செய்ததோடு, 10ற்கும் மேற்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு நடத்திய கோவிட் பரிசோதனையில் அவர்கள் எவருக்கும் கொரோணா  தொற்று இருக்கவில்லை என முடிவுகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக காவல் நிலையத்திற்கு ஆசிரியர்களைச் சந்திப்பதற்காக எதிர்கட்சி தலைவர்  சஜித் அணியினருக்கு இடமளிக்காததினால்  அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் காவல்துறைமா அதிபருக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் சஜித் அணியிலுள்ளவருமான நளின் பண்டார தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் இறுதிவரை தொடர்புகொள்ள முடியாமற் போயுள்ளது.

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஆசிரியர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சஜித் அணியினர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews