முன்னாள் அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடரப்படாது என சட்ட மாஅதிபர் அறிவிப்பு…!

தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடரப்படாது என சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார்.

இன்று (04) குறித்த வழக்கு, சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதன் 14ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள  வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரப் போவதில்லை என, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார தெரிவித்தார்.

தான் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில், அதற்கு எதிராக கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படுவதை தடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக,  சட்டத்தரணி ஜனக பண்டார தெரிவித்தார்.

விசாரணை முடிவடையும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்குமெனவும் எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமெனவும் அவர் முலும் தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த பிரதிவாக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர எதிர்பாக்கவில்லையென அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் 14 பிரதிவாதிகள் இருப்பதால், அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது சட்ட மாஅதிபரின் நிலைப்பாட்டை தெரிவிப்பது பொருத்தமானது என, நீதிபதிகள் குழாம் சட்டத்தரணிக்கு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றம் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு முறையற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டி.கே. பி. தஸநாயக்க உள்ளிட்ட கடற்படையின் 14 உறுப்பினர்கள் மீது சட்ட மாஅதிபரினால் இவ்வழக்கு தாக்கல் செய்ய்யபட்டிருந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews