யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு முடக்கநிலை ஏற்படலாம்..! யாழ்.மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாவிட்டால் மீண்டும் மாவட்டத்தில் ஒரு முடக்க நிலையேற்படலாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட சுகாதார மேம்பாட்டு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலை தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் இதுவரை 19,062 பேர் கொரோனாத் தொற்றாளர்களாகவும் 502 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தற்போது 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தடுப்பூசியை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் 309,839 பேரும் 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56000 பேரும் 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57265 பேரும் முதலாவது ஊசியை பெற்றுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி என்பதை 88,800 பேர் பெற்றுள்ளனர்.முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர். ஒமிக்ரோன் திரிபு தற்போது பரவிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்திலும் அது பரவுவதற்கான நிலைகள் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம்.இதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், பூஸ்டர் தடுப்பூசி வாரம் பிரகடனப்படுத்தவுள்ளோம்.

பாடசாலை போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews