வேலணை உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்த பெண்! முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க ஆளுநர் பணிப்பு.. |

சுகயீனமடைந்த நிலையில் யாழ்.வேலனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, கடந்த 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று அதிகாலை நீராடி நித்தியா திருவருள் என்ற குடும்பப் பெண் திடீர் சுகவீனம் உற்ற நிலையில் வேலணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வேலணை வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத நிலையில் அம்புலன்ஸ் சாரதியும் குறித்த வைத்தியசாலையில் கடமையில் இருந்திருக்கவில்லை எனவும். இதனால் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பெண் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா.செந்தில் நந்தனனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழு அமைக்கப்பட்ட நிலையில் அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews