யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலை விவகாரம்! சத்திர சிகிச்சை செய்த மருத்துவர் குழு விபரத்துடன் அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் பணிப்பு.. |

யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலையில் கருப்பை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சத்திர சிகிச்சை நடத்திய மருத்துவ குழு உள்ளிட்டோரின் விபரங்களுடன் முழுமையான அறிக்கையை எதிர்வரும் 18ம் தகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணின் உடலிலேயே  சத்திர சகிச்சையின் போது துணியை உள்ளே வைத்து தைக்கப்பட்டதால் உயிரிழந்தார். பெண்ணுக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனால் நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10 ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக. பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த செய்வாய் கிழமை இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா  பெண்ணின் சடலத்தை நேற்று முன்தினம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளார்.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளமும் 10 சென்ரிமீற்றர் அகலமுமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன், தனியார் மருத்துவமனை பணிப்பாளர், மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் உள்ளிட்டோரை நேற்று மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார்.

பெண்ணின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவாவிடம் நேற்று முற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டது.

தொடர்ந்து நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்துக்குச் சென்ற நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.

உயிரிழந்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை முன்னெடுத்த மருத்துவ குழுவினரின் விவரம் உள்ளிட்டவை வரும் ஜனவரி 18 செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை நீதிவான் மன்றில் முன்வைக்கவேண்டும். அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை முன்னெடுக்கப்படும் என்று நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews