உள்ளகப் பொறிமுறையின் விசித்திரத்துக்கு லொஹானின் அராஜகம் ஓர் எடுத்துக்காட்டு! – ஜனா எம்.பி. குற்றச்சாட்டு

“உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி, ஐ.நா. பொதுச் சபையில் பேசி மூச்சு விடுவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனித உரிமைகளின் மாண்பையும் சிறைக்கைதிகளின் நலன்களையும் சிறப்பாகக் கவனித்தார்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறையின் விசித்திரத்துக்கு லொஹானின் அராஜகம் ஓர் எடுத்துக்காட்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைத் தடை செய்துவிட்டு, அவர்களைப் பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருப்பது நகைச்சுவையானது.  ஜனாதிபதியின் புத்தி மங்கியுள்ளதையே இது காட்டுகின்றது.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம். அதுபோலவே ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதியின் உரை தமிழ் மக்களுக்கு வைகுண்டம் போகும் கதையாக இருக்கின்றது.

உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி ஐ.நாவில் பேசி மூச்சு விடுவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனித உரிமைகளின் மாண்பையும் சிறைக்கைதிகளின் நலன்களையும் சிறப்பாகக் கவனித்தார்.

இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறையின் விசித்திரத்துக்கு லொஹானின் அராஜகம் ஓர் உதாரணம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச 13 ஆவது திருத்தச் சட்டம் போதாது. 13 பிளஸுக்குச் செல்வேன் என்றார்.

எதை எப்படிப் பேசி சர்வதேச சமூகத்தை நமது ஆட்சியாளர்கள் தம் வசப்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

முன்னாள் ஜனாதிபதிகளான டி.எஸ்.சேனாநாயக்க முதல் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரையில் எவருக்கும் நாடு தொடர்பில் ஒரு பொதுவான கொள்கை இல்லை. ஒரு முகம் இல்லை.

நாட்டின் பல்லினத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் இல்லை” – என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews