கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு!

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் காணாமல்போன நிலையில், நேற்றிரவு 11.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். வவுனியா கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன் ஒருவன் நேற்று குதித்துள்ளான்.
குறித்த சிறுவன் அந்தப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்ததுடன், கிணத்தில் குளிக்கச் செல்வதாக அருகில் இருந்த இளைஞர்களிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ஆடைகளை கழற்றி கிணற்றின் அருகில் வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் சென்றுபார்த்தபோது, அந்த இளைஞரை காணவில்லை.
இதனையடுத்து ஊர்மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிராமத்தவர்கள் கிணற்றினுள்ள இறங்கி தேடுதல் நடாத்தியநிலையில் நீண்ட நேரமாகியும் சிறுவனை மீட்கமுடியவில்லை.
ஆயினும் கிராம மக்களின் தொடர்சியான முயற்சியால், கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாமடு பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.

Recommended For You

About the Author: admin