ரஞ்சனை விடுதலை செய்க! – ஜனாதிபதியிடம் மனோ கோரிக்கை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பொதுமன்னிப்பை வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் ரஞ்சனைச் சந்தித்து சுகநலம் விசாரித்த பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மனோ கணேசன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவருடன் நானும் இங்கு வந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதுபோல் ரஞ்சன் ராமநாயக்க சிறையில் இருக்க வேண்டிய நபர் அல்லர்.

எனவே, மனித நேயத்தின் அடிப்படையில் அவருக்கு முழுமையான பொதுமன்னிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கொலை செய்துவிட்டோ, கொள்ளை அடித்துவிட்டோ, குற்றங்கள் புரிந்துவிட்டோ அவர் சிறைக்குச் செல்லவில்லை.

மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து கதைக்கக் கூடியவர் அவர். அவ்வாறு கதைக்கும்போது சொற் பிரயோகங்களில் பிழை ஏற்படலாம். அவ்வாறானதொரு விடயத்துக்காகவே சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்கின்றார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிமன்றத் தரப்பில் உள்ளவர்களிடமும் இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றேன்.

வழக்கின் பிரதான தரப்பு அவர்கள்தான். எனவே, அவர்கள் மன்னிப்பு வழங்கினால், ஜனாதிபதியால் அதற்குச் செயல் வடிவம் கொடுக்க முடியும்” – என்றார்.

Recommended For You

About the Author: admin