சத்தமின்றி அபகரிப்பு செய்யப்படும் தமிழர் பூர்வீகம்: வ.சுரேந்தர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்கும் இடப்பரப்பு கோரி அண்மையில் நாடாளுமன்றத்தில் பெரும் வாக்குவாதங்கள் முஸ்லிம் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சட்ட அங்கீகார வர்த்தமானி பிரசுரம் மூலம் பிரகடனப்படுத்தப்படாத ஒரு பிரதேச செயலகமாகவுள்ள இந்த கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கு அடிப்படை நியாயமே அற்ற நிலையில் கோசமிட்டது உண்மையில் நகைப்பாகவுள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பரப்பு 80 சதுர கிலோ மீற்றர் என்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவின் பரப்பு 16 சதுர கிலோமீற்றர் என்றும் தமக்கான தனித்தனி முஸ்லிம் பிரதேச செயலக பிரிவுகளை கோறளைப்பற்று, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பகுதிகளிலிருந்து பிரித்தெடுத்து மிக மிகச் சிறிய பரப்பு தமக்கு போதுமானதென அவ்வேளையில் விளம்பரம் செய்து தமிழர் பகுதிகளிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி கபடத்தனமாக பிரித்துப் பெற்றுக்கொண்டு இன்று அதனை மேலும் மேலும் விசாலமாக்கும் முனைப்பில் நிற்கின்றனர்.

1999/2000களில் உள்நாட்டுப் போராட்டம் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதிகளில் அரசின் செல்வாக்கினை தம்பக்கம் வைத்துக் கொண்டு சத்தமின்றி மிகமிக அவசரமாகவும் தந்திரமாகவும் ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவுக்கு ஏறாவூர்பற்று செங்கலடி தமிழ் கிராமங்களையும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்கு கோறளைப்பற்று வடக்கு வாகரைக்கு சொந்தமான தமிழர் பூர்வீக காணிப்பகுதிகளையும் இணைப்பதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.

2011/12 காலப்பகுதிகளில் சகல தமிழர் தரப்பு போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கிப் புறந்தள்ளப்பட்ட காலப்பகுதிகளில் தமது தந்திரமான இரண்டாவது நாடகத்தை அரங்கேற்றுவதற்காக அன்றைய அரசின் உதவியுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமிர் அலி உள்ளடங்கிய ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி நிர்க்கதியாக இருந்த தமிழர் தரப்பு அரச அதிகாரிகளைக் கொழும்புக்கு அழைத்து ஆணைக்குழு எனும் பெயரில் அமிர் அலி சமர்ப்பித்த மேற்குறிப்பிட்ட தமிழர் கிராமங்களின் இணைப்பு தொடர்பான தீர்மானத்தை உடன் செயற்படுத்த வேண்டும் எனத் திணிக்கப்பட்டபோதும் அன்றைய அரச அதிகாரிகளால் முற்றிலும் மறுக்கப்பட்டது.

ஆனாலும் தமது அரசியல் பலத்தை பிரயோகித்து ஒருபக்க தீர்மானமாக நிறைவேற்றியதாகக் கூறப்படும் விடயத்தையே அண்மையில் நடந்த நாடாளுமன்ற உரையில் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்போல் நாடகமாடி அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.

பூர்வீகமான தமிழர் பகுதிகள் மிக நீண்டகால கபடமான திட்டங்களின் மூலம் பறித்துக் கொள்ள முஸ்லிம் தரப்பு முயற்சிக்கும் வேளையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே நாடாளுமன்றில் இதற்கெதிராக குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக உள்ள அனைத்து நியாயங்களையும் முன்னிலைப்படுத்த ஏனைய தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுக்க வேண்டுமென்பது தமிழ் மக்களின் கட்டளையாகின்றது.

இதில் கவனிக்கப்பட்ட வேண்டியதென்னவென்றால் போர்க்கால சூழலில் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளில் அல்லது போர் நிலவும் பகுதிகளுக்குள் பயணிக்க இயலாத நிலையில் மக்களின் நன்மை கருதி மக்கள் சேவைக்கான நிர்வாக கடமைகளைத் தற்காலிகமாக மட்டும் ஜெயந்தியாய ரிதிதென்ன போன்ற கிராமங்கள் கோறளைப்பற்று மத்திக்கு நிலத்தொடர்பற்ற வகையில் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இன்று அதனை தமது நிருவாக கட்டமைப்புக்குள் நிரந்தரமாகக் கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகளைச் செய்து வருகின்றனர்.

அதனையும் அதனோடிணைந்த கிராமங்களான புணானை கிழக்கு, மாங்கேணி தெற்கு, காரமுனை, வட்டவான், பாலமன்கேணி, ஆலங்குளம், குகநேசபுரம், ஓமடியாமடு போன்ற தமிழர் பூர்வீக நிலங்களையும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவின் கீழான மாவடிச்சேனை செம்மண்ணோடை போன்ற தமிழர் கிராமங்களையும் தம்மோடு இணைத்துக் கொள்ளப் பகீரத பிரயத்தனங்களைச் செய்து வருகின்றனர்.

ஆனாலும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை மற்றும் வாகரை சுகாதார வைத்தியர் பிரிவும் ஜெயந்தியாய ரிதிதென்ன போன்ற கிராமங்கள் உள்ளடங்கலாக அனைத்து வாகரை கிராமங்களுக்கும் சேவைகளை இன்றுவரை வழங்கி வருகின்றனர். அது மட்டுமல்லாது ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் தற்காலிக நிர்வாகத்திற்காக இணைக்கப்பட்ட கிராமங்களுக்கான சுகாதார சேவைகளையும் செங்கலடி சுகாதார பிரிவினரே மேற்கொள்கின்றனர்.

மேலும் வாகரை காரமுனை கிராமமானது வர்த்தமானி மூலம் அடர்ந்த வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தும் இன்று பாதிக்கும் மேலாகக் காடுகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அடாத்தாக முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டு எந்தவிதமான ஆவணங்களும் இல்லாத நிலையில் அரச அதிகாரிகளை அச்சுறுத்துவது மட்டுமன்றி அது தனி முஸ்லிம் கிராமம் என்று அறிவிக்கும் அளவிற்கு இன்று தமிழர் பூர்வீகங்கள் அழிக்கப்பட்டு மட்டக்களப்பின் நிலை மிக மோசமடைந்து வருகின்றது.

இத்தகைய மோசமான நிலைக்கு சில அரச அதிகாரிகளும் காரணமாகியுள்ளனர். தாம் தமிழர்களாக இருந்தும் தமிழர் பக்கம் நியாயம் இருந்தும் அவற்றைக் கருத்திற் கொள்ளாது பணத்திற்கு அடிமையாகி தமிழர் நிலங்களை மாற்றானுக்குத் தாரை வார்த்தார்கள் இதற்கு சிறந்த உதாரணமாக வாகரை பிரதேச செயலகத்தில் முன்னால் பிரதேச செயலாளராக இருந்த சுப்பிரமணியம் கரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் மற்றும் வாகரை பிரதேச செயலக முன்னாள் காணி வெளிக்கள போதனாசிரியர் வேலாயுதம் வேந்தன் ஆகியோரை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட முடியும்.

இத்தகைய ஊழல் பெருச்சாளிகளின் மோசடிகள் அம்பலமானதால் பிரதேச செயலக பிரிவிலிருந்தும் பொறுப்புக்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டு கரன் ( முன்னாள் வாகரை பிரதேச செயலாளர்) மற்றும் செங்கலடி பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் விசாரணைக்காகக் கொழும்புக்கும் வேலாயுதம் வேந்தன் ( காணி வெளிக்கள போதனாசிரியர்) ஏறாவூர் நகரப் பிரதேச செயலக பிரிவுக்கும் சபைக்கும் அழைக்கப்பட்டமையை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் புணானை பிரதேசத்தில் மீள் குடியேற வந்த பெரும்பான்மை சிங்கள மக்களுக்கெதிராக தமிழ் அரசியல் வாதிகளையும் தமிழ் மக்களையும் தூண்டிவிட்டதுமில்லாமல் சிங்களவர்களுக்கெதிராக தமிழ் மக்கள் உள்ளார்கள் எனும் விம்பத்தை உருவாக்கி தமது காணி அத்துமீறல்களை மூடி மறைத்து அதனை தமக்குச் சாதகமாக மாற்றி அதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இன்னும் நாவலடி பொலநறுவை கொழும்பு வீதிகளை அண்டி முஸ்லிம் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெரும்பாலான அரச காணிகள் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி முஸ்லிம் செல்வந்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் காணப்படுவதுடன் (ஆனால் வெளியில் கூறுவது, காணி இல்லாதவர்களுக்காகத் தான் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது என்று) இதனை வைத்துக்கொண்டு தமது பண பலத்தால் சட்டத்தையும் நீதியையும் மதிக்காது மோசடியாக ஆவணங்களைத் தயார் செய்து தமது பூர்வீக நிலம் என பாடங்கற்பிக்கின்றனர்.

அத்துடன் நாளாந்தம் அத்துமீறப்படும் அரசகாணிகளுக்கு எவ்வித ஆவணமுமின்றி தமது சொந்த நிலம் என வாதிடுவது மட்டுமல்லாது அவை அனைத்தையும் இன்று தமது நிருவாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முஸ்லிம் தரப்பின் சூழ்ச்சியென்பது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பதன் உச்சம் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினை தரமுயர்த்தினால் தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்படும் என்று தம்பட்டம் அடிக்கும் அதே ஹரீஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோறளைப்பற்று வடக்கு வாகரை மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை தமிழர்களின் காணிகளை அபகரித்து கோறளைப்பற்று மத்தியுடனும் செங்கலடியிலிருந்து பிரிக்க எத்தணிக்கும் தமிழ் கிராமங்களை ஏறாவூர் நகரப் பிரதேச செயலக பிரிவுடனும் இணைக்க முயலும் செயற்பாடானது தமிழ் முஸ்லிம் உறவை வளர்க்கும் என்பது நகைச்சுவையாக உள்ளது.

அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமக்குள் குறுகிய அரசியல் இலாபங்களைத் தேட முயற்சிக்காது இந்த விடயத்தில் கூடிய கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது யாதெனில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத 80 ச. கீ. பரப்பளவுடைய கோறளைப்பற்று மத்தியையும் 16 ச.கி பரப்பளவுடைய கோறளைப்பற்று மேற்கையும் ஒரே பிரதேச செயலகமாக இணைத்து பிரகடனப்படுத்தி தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்கனவே வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட எல்லைகளின் படி கோறளைப்பற்று வாழைச்சேனை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக பிரிவுகளின் அனைத்து கிராமங்களையும் அந்தந்த நிருவாக கட்டமைப்புக்குள் நிருவகிக்கவும் கூடியதான தீர்க்கமான முடிவினை இவ்வரசின் காலத்தில் எடுப்பதுடன் நிகழ்கால மற்றும் எதிர்கால தமிழ் சந்ததிகளுக்கு நிலங்களை வரையறுத்துப் பாதுகாத்துக் கொடுக்கும் தார்மீக பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் மக்களால் வழங்கப்பட்ட ஆணைகளைப் புறந்தள்ளி வாய்மூடி மௌனிகளாக இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு தற்கால தமிழ் மக்களுக்கும் எதிர்கால தமிழ் சந்ததிகளுக்கும் செய்யப்படும் வரலாற்றுத் துரோகம் என்பதை உணர்ந்து எதிர்வரும் மாகாணசபை தேர்தலிலும் தொடர்ந்து வரும் ஏனைய தேர்தல்களிலும் தகுந்த பாடத்தை நிச்சயம் புகட்ட வேண்டும் என்பதே நியாயமான எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin