தனிச் சிங்கத்தில் வந்த அழைப்பாணையை திருப்பி அனுப்பினார் மனோ எம்.பி.!

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தமது இல்லத்துக்கு கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக கொண்டு வந்து தரப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தால் அதை தமிழ் மொழியில் அனுப்புமாறும் அதுவரை அதை ஏற்று தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சல் பதில் கடிதத்தை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மனோ கணேசன் எம்பி அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் நீண்ட காலமாக நடக்கின்றன. பல எதிரணி எம்பிக்கள் பலமுறை அழைக்கப்பட்டார்கள். நான் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது திடீரென நான் அழைக்கப்பட்டுள்ளேன். ஏனிந்த திடீர் அழைப்பு என தெரியவில்லை. தனது மூன்றில் இரண்டு பலத்தை பயன்படுத்தி கடந்த ஆட்சியின் முழு அமைச்சரவையையும் குற்றம் சாட்டி தண்டனைக்கு உள்ளாக்க முடியும் என்ற பாணியில் ஜனாதிபதி சமீபத்தில் பேசி இருந்தார். அதன் வெளிப்பாடோ இதுவென தெரியவில்லை.

இந்த அழைப்பாணை முழுக்க சிங்கள மொழியில் மாத்திரம் இருக்கின்றது. இந்நிலையில் இதை ஏற்று என்னால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளுக்கு வர முடியாது என அறிவித்து விட்டேன். அத்துடன் எனக்கு சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை அனுப்பி இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஆணையாளர்கள் இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) பிரிவுகளை மீறியுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டி உள்ளேன்.

இலங்கை அரசியலமைப்பின் 4ம் அத்தியாயம், 22ம் விதி (2), (a) என்ற சட்ட விதிகளின்படி இலங்கையின் எந்தவொரு பிரஜையும், எந்தவொரு அரசு அலுவலகத்தில் இருந்தும், தமிழ் மொழியில் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும், தொடர்பாடல்களை பெற உரிமை கொண்டவர்கள் என்பதையும் நான் ஒரு தமிழர் என்பதை அறிந்த நீங்கள் இலங்கையின் சக ஆட்சிமொழியான தமிழ் மொழியில் என்னுடன் தொடர்பாடல் செய்ய தவறி அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளீர்கள் எனவும் நான் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியுள்ளேன்.

எதுவானாலும் முதலில் தமிழ் மொழியில் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பாணை வரட்டும். பின்னர் விசாரணைகளை அவசியமானால் சந்திப்பேன். ஆனால் அங்கேயும் பிழையில்லா தமிழ் மொழியில் இவர்கள் எனது வாக்குமூலத்தை எழுதி பதிவு செய்ய வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: admin