முன்னாள் பா. உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரிடம் TID யினர் விசாரணை!

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயலாளரான கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வழிமறித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (14.12.2021)இரவு 6.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் செயலாளர் க.சிறிமதன் தனது வீடு நோக்கி வவுனியா நகரில் இருந்து குடியிருப்பு வீதி வழியாக செல்லும் போது இரவு 6.30 மணியளவில் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தரித்து நின்ற சிவில் உடை தரித்த நால்வர் வழிமறித்துள்ளனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி தம்மை அடையாளப்படுத்தி வீதியில் வைத்து அரை மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கடந்த பத்தாம் திகதி வவுனியாவில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான காரணம், அவ் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் யார்? ஒழுங்கமைத்தவர்கள் யார்? மற்றும் தற்போது முன்னாள் பாராளுமன் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பில் தன்னிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட பின்னர் தான் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக க.சிறிமதன் தெரிவித்தார்.

மேலும் குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் க.சிpறிமதன் அவர்கள் 2018ம் ஆண்டு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜ அவர்களின் செயலாளராக கடமையாற்றிய போதும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin