யாழ் மாநகர சபை ஆணையாளர் வசமாகுமா? அல்லது தப்பி பிழைக்குமா?

யாழ் மாநாகர சபை பாதீடு எதிர்வரும் 15/12/2021 இடம் பெறவுள்ளது.
இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்.,
ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின் 2017 ம் அண்டு திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது தடவையாக முதல்வரை தெரிவு செய்யமுடியாது. மாறாக அச் சட்டத்தில் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாநகர முதல்வர் பதவி ராஜினாமா செய்து கொள்வதாக அல்லது பதவி இழந்ததாக கொள்ளப்படும் நிலையில் மாநகர சபை விசேட ஆணையாளர்/அல்லது மாநகர ஆணையாளர் வசமாகக்கூடிய நிலை உருவாகும்.

இதனால் யாழ் மாநகர சபையின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் பின்தள்ளப்படும் என்பது மட்டுமல்லாது மத்திய அரசின் ஆதிக்கம் மேலோங்கி இந்தியா அரசினால் கட்டிக்கொடுக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் மத்திய. அரசு தனது அதிகாரத்திற்குள் கைப்பற்றக்கூடிய ஏதுவான நிலை நிச்சயமாக உருவாகும் என்பது மட்டுமல்ல நாவலர் மண்டபம் உட்பட்ட பல முக்கியமான மாநகர சபை சொத்துக்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும் என்ற அபாயம் காணப்படுகிறது. அத்துடன், ஏற்கனவே மாநகர சபையால் மேற்கொள்ளப்படக்கூடிய மற்றும் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் இடை நிறுத்தப்படும் என்பது மட்டுமல்ல மாநகர சபைக்குட்பட்ட தமிழர் மரபுரிமை சொத்துக்கள் மத்திய அரசு மிக மிக இலகுவாக கைப்பற்றிக் கொள்ளும். காரணம், மாநகர சபை கலைக்கப்பட்டால் விசேட ஆணையாளர் அல்லது ஆணையாளர் ஆகியோர் அரச அதிகாரிகளே அவர்கள் தமது உயர் அதிகாரிகள் வழங்குகின்ற கட்டளையை அல்லது அறிவுறுத்தல்களை மீறி எந்த செயலையும் கடமையையும் அவர்களால் ஆற்ற முடியாது.

இந்நிலையில் தற்போது யாழ் மாநகர சபையில் அங்கத்துவம் கொண்டுள்ள தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் கட்சிகள் மாநகர சபையின் எதிர்காலம் மற்றும் தமிழ் தேசியத்தின் இருப்பு, அபிவிருத்தியின் தொடர்ச்சி, போன்ற தமிழ் தேசிய நலன் சார்ந்து யாழ் மாநகர சபையை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கடமையாகும் என்பது மட்டுமல்லாது ஒவ்வொரு தமிழ் தேசிய கட்சிகள், தமிழ் கட்சிகள் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு தமிழ் இனம் சார்ந்து, தமிழர் இருப்பது சார்ந்து தமது வாக்கு வங்கி அரசியலை விடுத்து பொறுப்புணர்வோடு செயலாற்றவேண்டயது காலத்தின் கட்டாயமாகும்.

தற்போது இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன எதிர்வரும் 15/12/2021 கொண்டுவரப்படவிருக்கின்ற பாதீட்டை நிச்சயமாக தோற்கடிப்பு செய்வதென தீர்மானுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உண்மையில் இவர்கள் மக்கள் நலன்சார்ந்து, மக்களுக்காக, அல்லது தமிழ் தேசியத்திறக்காக செயலாற்றுபவர்களாக தங்களை முன்னிறுத்தியவர்கள் அல்லது காட்டிக் கொள்பவர்கள். இவ்வாறு மாநகர சபை பாதீட்டை தோற்கடித்து மாநகர சபையை விசேட ஆணையாளர், அல்லது ஆணையாளர் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அரசின் செயற்பாட்டிற்க்கு நீங்கள் அறிந்தோ அறியாமலோ செயற்பட கூடாதென புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இது யாழ் மாநகர சபைக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து தமிழ்ர் உள்ளூராட்சி சபைகளுக்கும் பொருந்தும்.

Recommended For You

About the Author: Editor Elukainews