வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார்.

 

வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால் தோல்வியடைந்தது.
அந்நிலையில் 14ஆம் நாள் மீண்டும் பாதீடு திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினமும் பாதீடு தோல்வியடைந்தால் , தவிசாளர் பதவி இழக்க நேரிடும்.
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்   தவிசாளரான   கோணலிங்கம் கருணாந்தராசா (வயது 76) கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். அந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து , சுயேச்சை குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்நிலையில் அவர் பதவியேற்று இரண்டு மாத கால பகுதி முடிவுறாத நிலையில் அவரது முதலாவது பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. 14 நாளில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் , அவர் தனது தவிசாளர் பதவியை இழப்பார். என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews