சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப்பசளை தரமானதென மூன்றாம் தரப்பு நிறுவனம் அறிவிப்பு.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன சேதன உரத்தில் தீங்கிழைக்கும் பொருட்கள் காணப்படுவதாக பரிசோதனை செய்து அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்வது இடைநிறுத்தப்பட்டது.

எனினும், இந்த விவகாரம் குறித்து சீன நிறுவனம் கடுமையான அதிருப்தி வெளியிட்டு வருவதுடன், ஏதாவது ஓர் வழியில் இலங்கைக்கு இந்த உரத்தை வழங்கிவிட வேண்டுமென்ற முனைப்புக்களை எடுத்து வருகின்றது.

Schutter Global Inspection and Survey Company, என்ற நிறுவனமொன்றின் ஊடாக சீன நிறுவனம் தனது சேதன உர மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது. இந்த பரிசோதனைகளின் போது குறித்த சேதன உரத்தில் எவ்வித தீங்கிழைக்கும் பக்றீரியாக்களும் கிடையாது என கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாம் தரப்பு நிறுவனமான சூட்டர்ஸ் நிறுவனத்தின் பரிசோதனை முடிவு குறித்த அறிக்கையை சீன சேதன உர நிறுவனமான குயிங்டாவோ சீவின் பயோடெக் நிறுவனம் இலங்கை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

ஐ.எஸ்.ஓ தரத்தின் அடிப்படையில் இந்த பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளதாகவும், சேதன உரம் தரமானது எனவும் சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே குறித்த நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி எட்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு கோரி தேசிய தாவர காப்பு தடுப்பு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் ஒருவருக்கு நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

இதேவேளை, இந்த சேதன உர விவகாரம் குறித்து சீனத் தூதுரகம் விவசாய அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது, இதன் போது குறித்த சேதன உரம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin