மீட்கப்பட்ட கதிர்காமம் ஆலய தங்கத் தட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்கு!

காணாமல்போயிருந்த நிலையில், மீளவும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவிடம் கையளிக்கப்பட்ட தட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்காகக் கொழும்பு குற்றவியல் பிரிவு தயாராகின்றது.

பக்தர் ஒருவரால் 38 பவுண் எடையிலான தங்கத் தட்டு ஒன்று காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தங்கத் தட்டு காணாமல்போயுள்ளது எனக் கதிர்காமம் ஆலய பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகரவுக்கு, சமூக ஊடகம் வாயிலாக நபர் ஒருவர் அறியப்படுத்தினார்.

இதையடுத்து, பஸ்நாயக நிலமேவினால், பொலிஸ்மா அதிபருக்கு அது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டது.

பின்னர், கொழும்பு குற்றவியல் பிரிவினூடாக இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், கடந்த 28 ஆம் திகதி, குறித்த தங்கத் தட்டு நபர் ஒருவரால் மீண்டும் அது ஆலயத்துக்குப் பொறுப்பளிக்கப்பட்டது எனப் பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.

இந்தத் தட்டு, அந்த ஆலயத்தின் பிரதான பூசகராகச் செயற்படும் சோமபால ரி.ரத்நாயக்கவின் இல்லத்தில் இருந்தது எனத் தெரிவித்து, குறித்த நபரால் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தங்கத் தட்டு கதிர்காமம் ஆலயத்துக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மீளக் கையளிக்கப்பட்டுள்ள தட்டு, குறித்த தங்கத் தட்டா என்பதையும், அதன் நிறை தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றன என்று கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews