தைவான் மீதான சீனாவின் இராணுவ வியூகம் மீண்டும் ஒரு போருக்கு வழிவகுக்குமா?

சர்வதேச அரசியல் போக்கில் மீண்டும் ஒரு உலகப்போருக்கான வாய்ப்பு காணப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதில் அடையாளப்படுத்தப்படும் களங்களில் ஒன்றாக தைவான், -தென்சீனக்களம் முதன்மைப்படுத்தப்படுகிறது. சீனாவின் ஓர் அரசு கொள்கையை மையப்படுத்தி தொடரும் சீனா, -தைவான் நெருக்கடியும் சர்வதேச தலையீடுகளும் தென்சீனக்கடலை தொடர்ச்சியாக பதட்டத்துக்குள் வைத்துள்ளது. இக்கட்டுரையும் சீனா-, தைவான் நெருக்கடியின் அண்மைய நிகழ்வுகளை அடிப்படையாய் கொண்டு அதன் அரசியல் தாக்கங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது

.

அக்டோபர் 1-4(2021) வரையான நாட்களில், சீனா சுமார் 158 போர் விமானங்களை தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் அதன் செயல்பாட்டை அதிகரித்துள்ளது. தினசரி ஏ.டி.ஐ.எஸ் பகுதிக்கு போர் விமானங்களை அனுப்புதல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளில் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை சீனாவின் அணுகுமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது. ஆரம்பத்தில் கண்காணிப்பு விமானங்கள் அடிக்கடி அனுப்பப்பட்டாலும் தற்போது போர் விமானங்களூடாக ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது. அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களின் பிரவேசம் அதிகரித்துள்ளது. பெரிய அளவிலான நடவடிக்கைகள் பெரும்பாலும் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இணைக்கப்படுகின்றன. கடந்த 01.10.2021 அன்று சீனாவின் தேசபக்தி விடுமுறை தினமாகும். அன்றைய தினமே சீன இராணுவம் தைவான் மீதான பதட்டத்தை அதிகரித்தது. அன்றைய தினம் 39 விமானங்களிலும் 02.10.2021 அன்று 38 விமானங்களிலும் தைவானின் ஏ.டி.ஐ.எஸ் பகுதிக்கு ஊடுருவல்களை மேற்கொண்டன. இதனை அமெரிக்கா கண்டித்ததைத் தொடர்ந்து, 04.10.2021 அன்று 56 விமானங்களை ஏ.டி.ஐ.எஸ் பகுதிக்கு அனுப்பியிருந்தது.

இது சீனாவின் நெருக்கடிகள் தைவான் தலைமையின் மீது அழுத்தத்தை அதிகரிக்க தயாராக இருப்பதையே காட்டுகிறது. இந்நிலைமையை தைவானின் பாதுகாப்பு அமைச்சர் சியு குவோ-செங் தனது 40 வருட இராணுவ வாழ்க்கையில் மிகக் கடினமானதென விவரித்தார். தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென், சீனாவிடம் சுய ஆட்சி தீவு விழுந்தால் பேரழிவு விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து தைவானின் ஜனநாயகத்தையும் வாழ்க்கை முறையையும் காக்க எதை வேண்டுமானாலும் செய்வேன் என்று வலியுறுத்தினார்.

தைவானின் சீனா மீதான நெருக்கடிக்கு சீனாவின் ‘ஒற்றை அரசு’ கொள்கை என்பனவற்றை கடந்து தைவானின் அமைவிடம் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து சீனாவை பாதுகாத்து கொள்ள அது சீனாவின் பிடிக்குள் இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. சமீபத்திய சர்வதேச அரசியல் அதிகமான சமுத்திரங்களை மையப்படுத்திய அரசியலாகவே காணப்படுகிறது. குறிப்பாக 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதை மையப்படுத்தி இந்து சமுத்திரமும் பசுபிக் சமுத்திரமும் சர்வதேச அரசியலில் முதன்மை பெறுகின்றன. அதனடிப்படையில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தீவுகளின் நிலப்பரப்புக்களில் வல்லாதிக்க அரசுகள் தங்கள் பாதுகாப்பு அரண்களை அமைப்பதில் போட்டி போட்டு வருகின்றன. இந்நிலையிலேயே தைவானின் புவிசார் அரசியல் அமைவிடம் சீனாவிற்கு பிரதானமாக பாதுகாப்பு அரணாகவும் மேற்கு நாடுகளுக்கு சீனாவை தகர்ப்பதற்கான மையமாகவும் காணப்படுகிறது. எனினும் தைவானின் அரசியல் விருப்பு சீனாவிற்கு நேர்மாறாக காணப்படுவதனால் சீனா தைவான் மீதான நெருக்கீடுகளையும் அதிகரித்த வருகின்றது.

தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் சீனாவின் ஊடுருவல்களுக்கு சீனாவிற்கு பல அரசியல் நோக்கங்கள் காணப்படலாம். பிரதானமாக தென்சீனக்கடலை மையப்படுத்தி சமீபத்தில் எழுந்துவரும் சீனாவிற்கான நெருக்கடிகளும் அதனை தீர்ப்பதற்கான உபாயமாக தைவான் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. அதனடிப்படையில் அண்மையில் தென்சீனக்கடலை மையப்படுத்தி சீனாவிற்கு எழுப்பப்பட்டுள்ள நெருக்கடிகளை அவதானிக்க வேண்டும்.

முதலில், லிதுவேனியா வில்னியஸில் தைவானிய தூதரகத்தை வரவேற்றது போல மேற்குலக நட்பு சக்திகள்; சமீபத்தில் தைவானுக்கு அதிக ஆதரவை வழங்கிவருகின்றன. இது சீனாவின் ‘ஒரே சீனா கொள்கைளை’ நிராகரிப்பதாக தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வில்னியஸ் தைவானின் பிரதிநிதி அலுவலகத்தை அமைப்பதற்கான கோரிக்கையை அங்கீகரித்துள்ளது. இந்நடவடிக்கை சீனாவின் ஒரே சீனா என்ற கொள்கைக்கு சவாலை பிரதிபலிக்கவில்லை என லிதுவேனியா வலியுறுத்தினாலும், இந்த முடிவு ஐரோப்பிய நாடுகள் தைவானை அங்கீகரிப்பதற்கான முதல் படியாக அமைந்துவிடுமா என சீனா கருதுகிறது. சீனா லிதுவேனியாவிலிருந்து தனது தூதரை மீளழைத்துள்ளதுடன் லிதுவேனியாவுடனான பொருளாதார உறவுகளையும் நிறுத்தியுள்ளது. மேலும், செப்டம்பர் 20- முதல் 30வரை சைப்ரஸின் லிமாசோலில் நடைபெற்ற 27 வது நீர்மூழ்கி உலக சாம்பியன் போட்டியில் ஐந்து தைவான் வீரர்கள் பங்கேற்றனர். செப்டம்பர்-28அன்று சீனாவின் தலையீட்டில் நிகழ்வின் அமைப்பாளர்கள் முன்னறிவிப்பின்றி நேரடி ஒளிபரப்பில் தைவான் கொடியை லீடர் போர்டில் இருந்து அகற்றினர். எனினும் தைவானிய வீரர்கள், தங்கள் கொடியை தடை செய்த பின்னர் தங்கள் தைவானிய சகாக்களை ஆதரித்து ஒற்றுமையின் அடையாளங்களை வெளிப்படுத்தியமை தைவானின் அங்கீகாரத்துக்கான தைவானின் முயற்சி மீது அதிக கவனத்தை செலுத்துகிறது. இந்நிலையிலேயே அண்மைய சீனாவின் தைவான் மீதான விமான ஊடுருவல்கள் தைவானிய தலைமை மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்புக்களுக்கு தைவானைப் பாதுகாப்பதில் அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் முயற்சியாகவுமுள்ளது.

இரண்டாவது,சீன அதிகாரிகள் சீன மக்களிடையே தைவானை அரசியல் பாதுகாப்பின் ஒரு வடிவமாக அடையாளப்படுத்துவதில் அதிக கவனம் கொண்டுள்ளனர். தைவான் சீனாவின் ஓர் அலகு என்பதுவும் சீன மக்களிடையே கருத்தியல் ரீதியாக ஆழமாக பதிந்து விட்டது. இந்நிலையில் சீனாவின் ஒவ்வொரு வெற்றியும் தைவானின் நிலப்பரப்பின் தேவையை உருவாக்குகிறது. இது சீன மக்கள் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் சீன அதிகாரிகளிடம் காணப்படுகின்றது. ஆதலால் தொடர்ச்சியாக தைவானை சீனாவின் அலகு என்ற எண்ணத்தை சீன மக்களிடையே உருவாக்குவதில் சீனா அதிகாரிகள் மும்மரமாக உள்ளனர். இதன் சான்றே, கடந்த ஆண்டு ஒகேனியாவில் நடந்த விருந்துக்கு வந்திருந்த சீன இராஜதந்திரி துரதிர்ஷ்டவசமாக அங்கு தைவானின் கொடியுடன் ஒரு கேக் இருந்ததை கண்டதும் குழப்பமடைந்து பேரைத் தொடங்குமாறு அரசுக்கு அறிவித்தமை. இவ்வாறானதொரு மனநிலை காணப்பட்டதுடன்; சீனாவின் தைவான் மீதான நெருக்கீடு அவதானிக்கப்படுகிறது. மேலும் சீன மக்கள் குடியரசின் ஸ்தாபனத்தை நினைவுகூரும் பொன் வாரத்தின் போது தைவான் மீதான ஊடுருவலை தொடங்கியமை கட்சி விசுவாசத்தையும் அரசியல் நல்லொழுக்கத்தையும் சீன மக்களிடையே வெளிப்படுத்துகின்றன.

மூன்றாவது, தென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒத்திகை நடத்தியுள்ளனர். தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் சூழலில் அமெரிக்க மற்றும் மேற்கு கூட்டு நாடுகளின் பயிற்சி சீனாவின் கோபத்தையே அதிகரிக்க செய்கிறது. பிரிட்டிஷ் விமானம் தாங்கி கப்பலான எச் எம்.எஸ் ராணி எலிசபெத் பிலிப்பைன்ஸ் கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களான யு.எஸ்.எஸ் ரொனால்ட் ரீகன், யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் மற்றும் ஜப்பானின் ஹெலிகாப்டர் அழிப்பான் ஜே.எஸ் ஐஸ் என்பவற்றுடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தனது டுவிற்றர் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளது. இக்கூட்டுப்பயிற்சியில் நியூசிலாந்து, நெதர்லாந்து மற்றும் கனடாவிலிருந்து கடற்படை கப்பல்கள் மற்றும் பணியாளர்களும் பங்கேற்றனர். ஆறு நாடுகளைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட மாலுமிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கு சீனா தனது எதிர்ப்பையும் வெளியிட்டிருந்து. அமெரிக்கா- பிலிப்பைன்ஸின் பாதுகாப்பு ஒப்பந்தப் பங்குதாரர் மற்றும் அதன் கூட்டாளிகள் ஆகியோர் தொடர்ந்து தென்சீனக்கடலில் ‘வழிசெலுத்தல் சுதந்திரம்’ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். இது, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் மீனவர்களை துன்புறுத்துவதாக அமைவதுடன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சர்ச்சைக்குரிய கடலில் சட்டவிரோத எரிசக்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கருதுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

நான்காவது, அமெரிக்க, பிரிட்டன் கூட்டில் அவுஸ்ரேலியா மேற்கொண்டுள்ள ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தமும் அதன் உள்ளடக்கங்களும் சீனா-, தைவானின் சமகால முரண்பாட்டில் ஒருவகையிலான தாக்கத்தை செலுத்தியுள்ளது. செப்டெம்பர் மாதம் அமெரிக்க, பிரிட்டன், அவுஸ்திரேலியா கூட்டில் உருவாக்கப்பட்ட ஆக்கஸ் எனும் ஒரு புதிய இந்தோ, -பசிபிக் மூலோபாய கூட்டணியின் ஒரு பகுதியாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற ஆஸ்திரேலியாவுக்கு உதவுவதாக அமெரிக்கா அறிவித்தது. இது சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதற்காக வாஷிங்டனின் இப்பகுதியில் கவனம் செலுத்தும் ஒரு பகுதியாக இருக்கும் என்று பெயர் தெரியாத நிலையில் பேசிய ஒரு அமெரிக்க அதிகாரி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தோ-, பசுபிக் பிராந்தியத்தை முதன்மைப்படுத்தி அமெரிக்க தலைமையில் முன்னெடுக்கப்படும் குவாட் மற்றும் ஆக்கஸ் போன்ற பாதுகாப்பு கூட்டுக்களை சீனாவிற்கு எதிராக கட்டமைக்கப்படும் நேட்டோ- 2 என்ற புதிய பார்வையையும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஆக்கஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தைவானுக்கு அருகிலுள்ள சீன விமானங்கள் கணிசமாக அதிகரித்து புதிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.

எனவே, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்கு சீனாவின் விமானங்களின் ஊடுருவலை அதிகரித்தமையானது, சர்வதேச ரீதியாக தென்சீனக்கடலில் அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான நெருக்கீடுகளுக்கு பதிலீடாகவே அமைந்துள்ளது. மேலும், தைவான் அதிக உலகளாவிய ஆதரவையும் அங்கீகாரத்தையும் கோருவதால், தைவான் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமான எச்சரிக்கை செய்தியாகவும் சீன ஊடுருவலை பயன்படுத்தியுள்ளது. தைவானிற்கான அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவானது அதிகமாய் அறிக்கைகளுடனேயே கடந்து செல்கிறது. மாறாக சீனாவை எதிர்த்து உலக நாடுகள் ஆயுதம் தரிக்க வாய்ப்பில்லை என்பது யதார்த்தமானதாகும். ஏனெனில் பெய்ஜிங்கின் ‘ஒரே சீனக் கொள்கை’ தைவான் மீதான தனது உரிமையை முறையாக அறிவிக்கிறது.

-பேராசிரியர் கேரீ.கணேசலிங்கம்-

Recommended For You

About the Author: Editor Elukainews