மின்சார சபையினரின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக மேலும் பல துறையினர் இன்று ஆர்ப்பாட்டம்!

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு உரித்தான 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு நோக்கிப் பயணிப்பதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்க வேண்டாம்.
நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், தாங்கள் கொழும்புக்கு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அதன் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய மின்சாரத்தடை சீரமைப்பு பணிகள் இடம்பெறும்.
எனினும், மிகப்பெரிய மின்சார விநியோகத்தடை இடம்பெறுமாயின், அதனை வழமைக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்படும்.
இந்நிலையில், சுற்றறிக்கை வெளியிட்டு, அழுத்தம் கொடுத்து, அச்சுறுத்தி, இந்த உடன்படிக்கையை ரத்து செய்யாமல், பயணிக்க முயற்சித்தால், வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு எதிரான உடன்படிக்கையை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும், இன்றும், நாளையும், மின்சார விநியோகத்தடையோ அல்லது இயற்கை காரணங்களால் ஏற்படும் மின்சாரத் தடையைச் சீர்செய்யாமலிருக்கும் நிலையோ ஏற்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேநேரம், குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், கனியவள கூட்டுத்தாபன மற்றும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தொழிற்சங்கங்கள் இன்று மதியம் 12 மணிக்குப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு மத்தியில், மின்சார விநியோகத்தடை ஏற்பட்டு, அதனைச் சீரமைப்பதற்கு முடியாமல்போனால், நீர் விநியோகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சங்கத்தின் இணை செயலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், மின்சாரத்துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, இலங்கை கனியவள கூட்டுத்தாபன ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டம், கொலன்னாவ பிரதான களஞ்சியம் மற்றும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பனவற்றுக்கு முன்னால் இன்று (03) மதியம் இடம்பெறவுள்ளது.
இதன் காரணமாக, எரிபொருள் விநியோக நடவடிக்கையில் தாமதம் ஏற்படக்கூடும் என அந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கனியவள தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித, தொழிற்சங்க பலத்தை தாங்கள் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கருத்துக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால், மக்களினதும், நாட்டினதும் இறைமையைப் பாதுகாக்க, விருப்பமின்றியேனும் நாட்டை முடக்குவதற்கு தாங்கள் பின்னிற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், துறைமுக தொழிற்சங்கம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு முன்னால் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் கொரகானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
13 ஏக்கர் பரப்பு துறைமுக காணியும், துறைமுக சேவை பிரிவுக்கு உரித்தான அனைத்து சேவைகளையும், சி.ஐ.சி.ரி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்தக் காரணத்தை மையப்படுத்தி, இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகம் அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறெனில், துறைமுகத்தை ஏன் விற்பனை செய்கின்றீர்கள் என அரசாங்கத்திடம் வினவுவதாக அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், துறைமுக சேவை ஊழியர்கள் தங்களின் ஒரு மணிநேர மதிய போஷண வேளையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews