ஒரே நாடு ஒரே சட்டம்’: ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி!

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான இந்தச் செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை இலங்கைக்குள் செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து சட்டவரைபைத் தயாரிப்பதற்காகவும், நிதி அமைச்சால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களை முன்வைப்பதற்காகவுமே இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு முறை ஜனாதிபதிக்கு இது சம்பந்தமாக அறிக்கை கையளிக்க வேண்டும். 2022 பெப்பரவரி 28ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையைக் கையளிக்க வேண்டும்.

இலங்கை அரசமைப்பின் 33 ஆம் உறுப்புரையில், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தலைமையிலான இந்த செயலணியின் உறுப்பினர்களாக பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

13 பேர் கொண்ட இந்தச் செயலணியில் ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை எனக் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews