மன்னாரில் விவசாயிகள் போராட்டம்…!

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்தும் நேற்றைய தினம் திங்கட்கிழமை(25) காலை 10.30 மணியளவில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டிலேயே  குறித்த கண்டன போராட்டம் இடம்பெற்றது.

-மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் உயிலங்குளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை குறித்த ஊர்வலம் இடம் பெற்றது.

-குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன்,மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி,உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள்,விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

-இதன் போது அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் கோசம் எழுப்பியதோடு அரசாங்கம் உடனடியாக இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்க கோரிக்கை முன் வைத்தனர்.

உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒன்று கூடினர்.இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

-இதன் போது குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் குறித்த மகஜரை ஜனாதிபதிக்கு உடனடியாக கை அளிப்பதாகவும், எமது விவசாயிகள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்தவர்கள்.பல்வேறு அழிவுகளுக்கு முகம் கொடுத்தும் சோர்ந்து போகாமல் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் எந்த சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போகாமல் தலை நிமிர்ந்து நிற்பார்கள் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோ நோகராதலிங்கம்,சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன் ஆகியோருக்கும் கையளிக்கப்பட்டதோடு, விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்க துரித நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews