எல்லாப் புகழும் இறைவனுக்கே! – ரிசாத் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை.

இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

“அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…!

இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…!

என்னை அநியாயமாக சிறையில் அடைத்த நாள் முதல், எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற, பிரார்த்தித்த தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை என்பது, எனது திடமான நம்பிக்கையாகும். எனது விடுதலைக்காக குரல் கொடுத்த சகோதர கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எனது விடுதலைக்காக செயற்பட்ட சட்டத்தரணிகள், சர்வதேச அரங்குகளில் செயற்பட்டவர்கள், ஊடக தர்மத்தை பேணி மனச்சாட்சிப்படி செயற்பட்ட ஊடகவியலாளர்கள். இன, மத, கட்சி வேறுபாடுகள் கடந்து செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன். எனது விடுவிப்பு என்பது முடிவல்ல…

சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களாக நமது உடன்பிறப்புக்கள் பலர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அநியாயமாக தடுப்புக்காவலிலும், சிறையிலும் இருக்கின்றனர்.

அவர்களது விடுதலைக்காகவும் நாம் எல்லோரும் தொடர்ந்தும் பிரார்த்திப்போமாக. உங்களது நம்பிக்கையையும் அமானிதத்தையும் காப்பாற்றும் வகையில், இன் ஷா அல்லாஹ், எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும். நான் நேசிக்கும் மக்கள் பணி தொடரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews