விரைவான தீர்வுக்கு முயற்சி! சுப்ரமணியன் சுவாமி கொடுத்துள்ள உறுதிமொழி.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி  இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி  (13) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில் முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டின் அவசியம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுப்பிரமணியம் சுவாமிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது, இந்திய கடற்றொழிலாளர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளினால் இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புக்கள் தன்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாக தெரிவித்துள்ள சுப்பிரமணியம் சுவாமி, கடல் வளங்களை அழிக்கின்ற றோலர் தொழில் முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற தன்னுடைய நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தினார்.

மேலும், இவ்விடயம் தொடர்பாக இந்திய மாநிலங்களவையில் உரையாற்றவுள்ளதாகவும், இந்திய தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி விரைவான தீர்வுக்கு முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் இரண்டு நாடுகளும் தொடர்புபட்ட சமகால நிலவரங்கள் தொடர்பாகவும் இரண்டு நாட்டு அரசியல் முக்கியஸதர்களும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews