கிளிநொச்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கு துணை போய்விட்டார்கள் – சுகாஷ் சீற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொன்னாவெளியிலே சுண்ணக்கல் அகழ்வு என்று கூறி தமிழர்களது காணியை அபகரிக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சந்திரன் பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாச்சிகுடாவிலே தமிழ் பாடசாலையின் பெயரை மாற்றுகின்றார்கள். உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் அகழ்விற்காக விகாரையை தேடுகின்றார்கள்.

இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் மையத்தில் அமைந்திருக்கின்ற சந்திரன் பூங்காவை ஆக்கிரமிப்பதற்கு இராணுவம் ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கிறது. இதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இன்று கிளிநொச்சியிலே சரியான மக்கள் பிரதிநிதிகள் கிடையாது. அனைவரும் அரசுக்கு விலை போய் விட்டார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசும், இராணுவமும் கிளிநொச்சி மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் இன்றையதினம் பல நூற்றுக்கணக்கான மக்களை திரட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகிய நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். இது ஆரம்பம் மட்டும்தான்.

இராணுவம் உடனடியாக ஆக்கிரமிப்புக்களை நிறுத்த வேண்டும். அல்லது இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews