தமிழர் தேசம் தனக்கெனத் தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலம் மட்டுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்…! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலமே தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் தெளிவாகச் சுட்டி நிற்பதாக  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழத் தேசிய துக்க நாளை முன்னிட்டு  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழ தேசத்தை சிங்கள பௌத்த பேரினவாதப் பூதம் இனவழிப்பின் ஊடாக ஆக்கிரமித்துக் கொண்ட கொடூரமான நினைவுகளை தமிழீழ தேசம் உணர்வுபூர்வமாக நினைவுகூரும் நாள்.

சிங்களத்தின் கோரமான, கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழ் மக்கள் ஆயிரமாயிரமாய், கொத்துக் கொத்தாய்க் கொன்றொழிக்கப்பட்டனர்.

பெரும் எண்ணிக்கையானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். பொதுமக்கள் சொத்துக்களும் இயற்கையும் பெருமளவில் நாசம் செய்யப்பட்டன.

நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் வகையிலானதோர் இனவழிப்பு உலகின் பலமிக்க அரசுகளின் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்தது.

உலக நாடுகளின் நலன்கள் என்ற சமன்பாட்டுக்கமைய இனவழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிய ஒரு சிறிய தேசத்தின் குரல்வளை நசுக்கப்பட்டது.

இவ் இனவழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின்  தொகை 1,40,000 க்கும் அதிகம் என முன்னாள் மன்னார் ஆயர் இராசப்பு ஆண்டகை அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள்சபையின் உள்ளக ஆய்வு அறிக்கையொன்று குறைந்தது 70,000 மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான நம்பகமான தகவல்கள் உண்டு எனத் தெரிவித்தது.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கெதிராக அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் மக்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப் பேரவை இவ் இனவழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்தது. வடக்கு மாகாண சபையும் இத்தகையதொரு  தீர்மானத்தை எடுத்திருந்தது.

உலகின் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களாலும் தமிழின அழிப்புக்கு எதிராக அனைத்துலக நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

கனடா நாடாளுமன்றம் மே 18 இனை தமிழின அழிப்பு நினைவு நாளாக பிரகடனம் செய்திருக்கிறது.

இருந்த போதும், இக் குரல்கள் எல்லாம் தமது நலன்களுக்காக அம்மணமாக ஆடும் வலு மிக்க அனைத்துலக அரசுகளின் காதுகளில் இன்று வரை விழவே இல்லை.

நித்திரை கொள்வதுபோல் நடிப்பவர்களை எவ்வாறுதான் எழுப்புவது? இருந்தும், நீதிக்கான குரலின் தார்மீகபலத்தில் நம்பிக்கை வைத்து தமது நீதிக்கான போராட்டத்தைத் தமிழர் தேசம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையுடன் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கு எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான மக்களே,

அனைத்துலக அரங்கில் இரண்டு யுத்தங்களை நாம் இன்று காண முடிகிறது.

நடைபெறும் ரஸ்யா – உக்ரெய்ன் யுத்தம் உலகின் அனைத்துலக அரசியல் ஒழுங்கில் கணிசமான தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. காசா மீது இஸ்ரேல் நடாத்தும் யுத்தம் மேற்குலக நாடுகளின் மனித உரிமைகள்  தொடர்பான அக்கறையின் பின்னால் உள்ள அரசியல் பாசாங்கு மீது பலத்த கேள்விகளை எழுப்பி வருகிறது.

காசாவில் பலஸ்தீன மக்கள் இன்று எதிர்கொள்ளும் பேரிடரைத் தமிழீழ மக்களும் இறுதி யுத்தக் காலப்பகுதியில் எதிர் கொண்டனர். காசாவில் இதுவரை கொல்லப்பட்ட மக்களை விட அதிகமான மக்கள் தமிழீழ மண்ணில் கொல்லப்பட்டனர்.

காசாவில் நடைபெறும் கொடுமைகளுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை அரசுகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.  பலஸ்தீன மக்களதும் தமிழீழ மக்களதும் உரிமைப் போரின் அனைத்துலகப் பரிமாணம் வேறுபட்டது. இதனால் காசா மீது கிடைக்கும் அதிக உலக கவனம் புரிந்து கொள்ளப்படக் கூடியது.

காசாவில் இஸ்ரேல் நடாத்தும் தாக்குதல்களுக்கு எதிராக உலகளாவியரீதியில் பெரும் கண்டனங்கள்  எழுந்துள்ளன. இஸ்ரேலை அனைத்துலக நீதிமன்றில்  நிறுத்தும் நகர்வை தென்னாபிரிக்கா மேற்கொண்டுள்ளது. இருந்த போதும், காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடரந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இஸ்ரேலுக்கு சில  ஆலோசனைகளைக் கூறிய வண்ணம் தமதுஆதரவுகளை வழங்கி வருகிறது.

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்தம் பலஸ்தீன மக்களுக்குச் சாதகமான வகையில் முடிவை எட்டுமானால் அது உலக ஒழுங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். அவ்வாறானதொரு சூழல் உருவாகுமானால் அது முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் கொல்லப்பட்ட நமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான சில வாய்ப்புகளை உருவாக்கக் கூடும்.

அன்பான மக்களே,

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புத் தொடர்பாக சிங்கள தேசம் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க  வேண்டும்.  ஆனால் இன்றுவரை அது குறித்த எந்தக் கரிசனையும் சிங்கள தேசத்திடம் இருந்து எழவில்லை. சிங்கள தேசத்தின் எந்தவொரு அரசியற்கட்சியிடமி்ருந்தோ அல்லது வலுமிக்க சிவில் சமூக அமைப்புகளிடமிருந்தோ தமிழின அழிப்புத் தொடர்பாக எந்தவித வருத்தமும் வெளிப்படவில்லை.

சிங்கள தேசம், தமிழர் தேசத்தின் இருப்பை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்காமல் இனக் கபளீகரம் செய்ய முற்படுகிறது.

அரசியல்தீர்வு என்று கபட நாடகம் ஆடிய வண்ணம் கட்டமைக்கப்பட்ட முறையில் இனவழிப்பைத்்தொடர்கிறது.

தமிழர் தேசம் தனக்கெனத் தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலம் மட்டுமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் தெளிவாகச் சுட்டி நிற்கிறது.

முள்ளிவாய்க்கால் ஈகிகள் நினைவுடன் நம் தேச விடுதலைக்காகத் தொடர்ந்து உழைப்போம் என உறுதி கொள்வோமாக என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews