ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவர் 14 நாள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ஐஸ் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் இன்று (10) தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எச்எம்.ரிஸ்வி தலைமையிலான, பொலிஸ்  இரகசிய தகவலையடுத்து அவர்கள் கடந்த 28 ஆம் திகதி செட்டிக்குளத்தில் வசிக்கும் 35 வயது இளைஞர் ஒருவரை 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த இளைஞர் பொலிசாரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உக்குளாங்குளம், மில் வீதி பகுதியில் வைத்து செட்டிகுளத்தில் வசிக்கும் 36 வயதுடைய இளைஞரும் 12 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் ஐஸ் போதைப் பொருளை விநியோகித்ததாக வவுனியா நகரப் பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மூவரையும் வவுனியா பொலிசார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews