மடு மாதாவின் திருப்பயணம் ஆரம்பம்…!

மருதமடு அன்னையின்  முடி சூட்டு விழாவின் 100 ஆவது ஆண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மருதமடு அன்னையின்  திருச்சொரூபம் மக்கள் தரிசிப்புக்காக இன்று(06)  யாழ்.மறைமாவட்டத்தை வந்தடைந்தது.

மருதமடு மாதாவின் திருச்சொரூபமானது யாழ் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக யாழ் மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளுக்கு இன்று 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை எடுத்து வரப்படவுள்ளது.

அந்தவகையில், இந்த மாதாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இப் பவனியானது, மருதமடுத் திருத்தலத்திற்குச் சென்று வர முடியாத அன்னையின் பக்தர்களுக்கு பெரும் ஆசீர்வாதமாக அமைவதுடன் மருதமடு அன்னையின் வருகையைத் தகுந்த ஆயத்தத்துடன் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்குமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றிலிருந்து 9 ஆம் திகதி வரை யாழ் மறைக்கோட்டத்திலும், 9 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதிவரை தீவக மறைக்கோட்டத்திலும் 11 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதிவரை இளவாலை மறைக்கோட்டத்திலும், 17 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதிவரை பருத்தித்துறை மறைக்கோட்டத்திலும் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை கிளிநொச்சி மறைக்கோட்டத்தலும் 26 ஆம் திகதிமுதல் 30 ஆம் திகதிவரை முல்லைத்தீவு மறைக்கோட்டத்திலும் அன்னையின் திருச்சொரூபப் பவனி எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில் அனைத்து பங்குகளிலும் மடு அன்னையை தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews