சஜித் தலைமையில் அரசியல் கூட்டணி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சஜித் பிரேமதாஸ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்.
இதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட மேலும் சில கட்சிகளுடனும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட சஜித் பிரேமதாஸ ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் தலைவர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் குழு ஒன்றும் இந்தப் புதிய கூட்டணியில் இணைய விருப்பம் வெளியிட்டுள்ளது எனவும், அவர்கள் உட்பட மேலும் பலர் தமது கட்சியில் இணையவுள்ளனர் எனவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசியல் இலாபங்களுக்காக செயல்படுபவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் தயாரில்லை.
கொள்கைகளுடன் கட்சியில் இணைய விரும்புபவர்களையே இணைத்துக்கொள்வோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மே தினத்தில் பலர் தமது கூட்டணி மேடையில் ஏற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews