கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவ உயர் அதிகாரியுடனான சந்திப்பில் ஏமாற்றமடைந்த மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி இராணுவ படைத் தலைமையகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ள நிலையில் இராணுவ உயர் அதிகாரியுடனான சந்திப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபிலவு மக்கள் அவர்களுக்கு சொந்தமான 56 குடும்பங்களின் 59.5 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி இராணுவ படைத்தலைமையகத்திற்கு முன்பாக நேற்று  போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது இராணுவத் தளபதியினை சந்திக்க போராட்டக்காரர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய மாலை 3 மணிக்கு இராணுவத் தளபதியினை சந்திக்கவுள்ளதாக கூறி அதற்காக 5 பேரின் பெயர் விபரங்கள், அடையாள அட்டை இலக்கம் என்பன போராட்டக்காரர்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மக்கள் கவனயீர்ப்பினை நிறைவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் கேப்பாபிலவு இராணுவ முகாமிற்குள் இருந்து உலங்கு வானூர்தி மூலம் இராணுவத்தளபதி வெளியேறியுள்ள நிலையில் போராட்டக்காரர்களை இராணுவ தளபதியுடனான சந்திப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

எனினும், வன்னி பிராந்தியத்தின் உயர் அதிகாரி ஒருவரே இவர்களை சந்தித்துள்ள நிலையில் இரவு 7.45 மணிவரை சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது குறித்த இராணுவ உயர் அதிகாரி கேப்பாபிலவு இராணுவ முகாம் அகற்றப்படாது என்றும் அந்த பகுதியில் உள்ள மக்களின் காணிகளின் அளவிற்கு  இராணுவ முகாமின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளை அமைத்து தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேச்சுக்களில் கலந்து கொண்ட கேப்பாபிலவு மக்கள் இராணுவ அதிகாரியுடன் முரண்பட்ட நிலையில் எமது காணி எமக்கு வேண்டும் என்று தெரிவித்து பேச்சுக்களை நிறைவு செய்து வெளியேறியுள்ளதுடன் மக்களின் கோரிக்கைக்கு அமைய, குறித்த அதிகாரி மட்டுமல்ல இன்னும் மேல் அதிகாரிகளுடன் கதைத்து முடிவெடுக்க கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews