இரா சம்பந்தன் தமிழினத் தேசியத் தலைவரா ?

தமிழரசுக் கட்சியின் திருகுதாளத்தை அம்பலப்படுத்தி அவதானிப்பு மையம் அறிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சி இரா.சம்பந்தனை தேசியத் தலைவராக பிரகடனம் செய்து இலங்கைத் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வந்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தமிழரசுக் கட்சி தான் மேற்கொண்ட இந்த மோசமான இழி செயலுக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

இலங்கைத் தமிழரசுக் கட்சின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனை தேசியத் தலைவராக பிரகடனம் செய்து இலங்கைத் தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ச்சியாக அறிக்கையிட்டு வந்திருப்பதை தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்துவதோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் தேசியத் தலைவர் என பதவிநிலை ஏதும் காணப்பட்டிருக்கவில்லை என்பதையும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம்
தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பில் இல்லாத ஒரு பதவிநிலையை ஏன் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கவேண்டும். இதன் உள்நோக்கம் என்ன என்பது தொடர்பில் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு இந்த மோசமான இழிசெயலிற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

தேர்தல் ஆணையத்திற்கு வழங்கும் தகவல்

இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடந்தோறும் தங்கள் கட்சியின் உத்தியோகத்தர்கள் சபை எனப்படும் செயற்குழுவின் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவேண்டும். இந்த விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டம், விசாரணை மற்றும் திட்டமிடல் பிரிவு ஆவணமாக வெளியிடும். அவ்வாறு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் காணப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தனது உத்தியோகத்தர் சபை உறுப்பினர்கள் விபரங்களை ஆண்டுதோறும் அனுப்பிவருகின்றது. அவ்வாறு அனுப்பப்பட்டு இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்கள் சபை உறுப்பினர் விபரத்திலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சி இரா சம்பந்தனை தேசியத் தலைவர் என பதவிநிலைப் படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மாவை சேனாதிராஜா தலைவராக பதவிவகித்த காலத்திலேயே தமிழினத்தை ஏமாற்றி தமிழரசுக்கட்சி இரா சம்பந்தனை தேசியத்தலைவர் என பதவிநிலைப் படுத்தியிருக்கிறது.

தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெற்று நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்வதில் ஏற்பட்ட மோசடிகள் காரணமாக திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண நீதிமன்றங்களில் கட்சி உறுப்பினர்களாலேயே வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் இத்தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழினத்திற்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மட்டுமே

தமிழினமானது இலங்கை அரச பயங்கரவாத்தினால் காலங்காலமாக இன அழிப்புச் செய்யப்பட்டு வந்த நிலையில் மூன்று சதாப்த காலத்திற்கு மேலாக தமிழினத்தை பாதுகாத்ததோடு தமிழினம் உலகமெங்கும் தலைநிமிர்ந்துவாழ வழியை ஏற்படுத்தியவர் தமிழீழத் தேசியத் தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனே ஆவார். அந்தப் பெருமைமிகு தலைவரையே தமிழினம் தமிழினத் தேசியத் தலைவராக கொண்டாடி வருகின்றது. தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக எந்த ஒரு அரசியல் தலைவரையும் தமிழினம் கொண்டாடத் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தமிழினத்திற்கு தேசியத் தலைவர் எனில் அது மேதகு வேலுப்பிளை பிரபாகரன் மட்டுமே என்பதில் தமிழினம் எப்போதும் உறுதியாகவே இருக்கிறது. ஆனால் தமிழினத்தையும்
தமிழீழ தேசிய விடுலைப் போராட்டத்தையும் தங்கள் வாக்கு அரசியலுக்காக சிங்கள ஆட்சியாளர்களிடம் விற்றுப் பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் தமிழினத் தேசியத் தலைவராக தங்கள் கட்சித் தலைவர்களைக் கொண்டாட என்ன தகுதியும் அருகதையும் இருக்கிறது என தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் மிகவும் காடமாக கேள்வி எழுப்புகின்றது.

அதைவிடுத்து முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தமிழர்கள் பெரிதும் நம்பிய தமிழரசுக்கட்சியை சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சின்னாபின்னமாக்கி இன்று நீதிமற்றில் கொண்டு போய் நிறுத்தியுள்ள இரா. சம்மந்தன் தேசியத் தலைவர் என சொன்னால் தமிழரசுக் கட்சியினரே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

தந்தை செல்வாவையே தமிழ் மக்கள் தேசியத் தலைவராகக் கொண்டாடவில்லை.

முதுபெரும் தமிழ் அரசியல் தலைவரான செல்வநாயகத்தையே தேசியத் தலைவர் என தமிழினம் அழைத்து பெருமைகொள்ளாது அவரை தந்தை செல்வா எனவே இன்றுவரை கொண்டாடிவருவதை வாக்கு அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நினைவுபடுத்துவதோடு, தமிழினத்திற்கு தேசியத் தலைவராக நீங்கள் மகுடம் சூடுவதற்குமுன் அதற்கான தகுதியையும், தியாகங்களையும் செய்வதற்கு தமிழ் தலைவர்கள் யாராவது தயாராக இருக்கிறீர்களா என்று எமது மக்களின் சார்பிலே கேள்வி எழுப்புகின்றோம்.

தமிழர்களின் காவல் தெய்வமாக விளங்கி உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் நான்கு படைகளை கட்டமைத்து சிங்கள தேசத்திற்கு சிம்ம சொப்பனமாகவும், அதேவேளை உலகில் ஒரு நாடு எப்படி அறத்தோடு வழிநடத்தப்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக தமிழர் தாயகத்தில் ஆட்சியை நிலைநாட்டிய எம் தேசியத் தலைவர் என்கின்ற பெருமைமிகு அடையாளம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மட்டுமே என்பதை மீள நினைவுபடுத்தும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் அந்த ஒப்பற்ற தலைவனுக்குபின் புதிதாக ஒரு தேசியத் தலைவருக்கோ அல்லது இரண்டாம் தேசியத் தலைவருக்கோ தமிழினத்தில் இடமில்லை என்பதையும் ஆணித்தரமாக பதிவுசெய்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews