கோப்பாய் ஆசிரியர் கல்லூரி அதிபருக்கு எதிராக விசாரணை!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில்  மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

‘தமிழ் வேள்வி 2023’ என்ற நிகழ்வில் ‘ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புகளின் எழுச்சி அவசியமானதா? அவசியமற்றதா?’ என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக் கத்தைக் குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்று கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு விளக்கமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவுக்கான மேலதிக செயலர் சீ.சமந்தி வீரசிங்கவால் கல்வி அமைச்சின் ஆசிரியர் பயிற்சிக் கல்விப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

ஒரு பட்டிமன்றக் கருத்தைக்கூட முறைப்பாடாகக் கருதி, அது நல்லிணக்கத்துக்கு கேடு என்ற ரீதியில் இடம்பெறும் இந்த விசாரணை நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான மிக மோசமான செயற்பாடு என அவதானிகள் விமர்சித்துள்ளனர்.

இதேவேளை – நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சிங்களக் கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள், பிக்குகள் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டபோதும் அது தொடர்பில் எவ் வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews