மத வழிபாடுகளை அவமரியாதை செய்து இனமத ஒற்றுமையை அழிக்க வேண்டாம் -றமேஷ் அடிகளார்

இலங்கையின் வடகிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும் இனம் மற்றும் மதம் சார்ந்த அடக்குமுறைகள் தொடர்ந்து வேறுபட்ட வடிவங்களில் நிகழ்த்தப்படுவது வெளிப்படையுண்மை. அந்தவகையில் அண்மையில் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற அடக்குமுறையை கத்தோலிக்க திருச்சபையின் அமலமரித்தியாகிகள் சபையின் வடமாகாண சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.

அத்தோடு தமது மத வழிபாட்டுகளுக்காக கூடியிருந்த பக்தர்கள் மேலும் மத வழிபாட்டுகளை நடத்திக்கொண்டிருந்த இந்துக்குருகள் மேலும் இலங்கை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிப்பதோடு இச்செயல் மிகவும் ஓர் அநாகரிகமான செயல் எனவும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கான பணியகத்தின் இயக்குனர் அருட்தந்தை யா. றமேஸ் அமதி அடிகளார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் தமது மத வழிபாட்டிற்காக சென்ற பக்தர்கள் என்றும் கைதுசெய்து சிறை வைக்கக்கூடிய தவறொன்றும் அவர்களால் இழைக்கப்பட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகாலமாக வடகிழக்கு தமிழ் மக்களை பலவழிகளிலும் இலக்கு வைக்கும் இலங்கை அரசு அண்மைக்காலங்களில் அவர்களின் உணர்வு மிக்க இறைவழிபாடுகளை களங்கப்படுதுவதிலும் மக்களின் ஆன்மீகச் செயற்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசும் நாசகாரிய வேலைகள முன்னெடுத்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இச்செயலற்பாடுகள் இன்று இலங்கை தேசத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் இனமத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முற்றிலும் தடையாகவே விளங்குகிறன. எனவே இலங்கை அரசு வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு வழிபாட்டிற்காக செல்லும் மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் தத்தமது கடவுளை வழிபட வேண்டிய அனைத்து வழிகளையும் ஏற்படுத்த வேண்டும் எனவும் மத வழிபாடுகளை அவமரியாதை செய்து இனமத ஒற்றுமையை அழிக்க வேண்டாம் எனவும் அருட்தந்தை றமேஸ் அமதி அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews