போலீஸ் தடுப்பு காவலில் இருந்தவர் மரணம், மன்னாரில் சம்பவம்….!

மன்னார் எருக்கலம் பிட்டி – புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வைத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை (2) காலை திடீர் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் எருக்கலம்பிட்டி தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ரம்ஸான் (வயது-29) என தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு முச்சக்கர வண்டியில் புதுக் குடியிருப்பு பகுதிக்குச் சென்று மீண்டும் எருக்கலம் பிட்டி கிராமத்தை நோக்கி வந்துள்ளனர்.

இதன் போது எருக்கலம் பிட்டி-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் மறித்து முச்சக்கர வண்டியை சோதனையிட்ட நிலையில் போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இருவரையும் கைது செய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் குறித்த இருவரையும் இன்றைய தினம் சனிக்கிழமை (2) காலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ரம்ஸான் (வயது-29) என்ற இளம் குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் எற்பட்டுள்ளது.

உடனடியாக மன்னார் பொலிஸார் குறித்த இளம் குடும்பஸ்தரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலை அனுமதித்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்க முடியும் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews