விரிசலாகும் இலங்கை இந்திய உறவு-பேராசிரியர் கே.ரீ கணேசலிங்கம்

இலங்கை-இந்திய உறவிலேயே இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்பு இருக்கின்றது என்ற உரையாடல் மீளவும் முதன்மைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் அத்தகைய எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதும் பின்னர் மீறுவதும் வழமையான நடவடிக்கையாக உள்ளது. அதனை இராஜதந்திரம் என்றே உரையாட விளைகின்றனர். இத்தகைய சூழல் ஒன்றுக்கான தொடக்கத்தை அநுராகுமார திஸநாயக்காவின் இந்தியப் பயணம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய அழுத்தத்திற்கு செவிசாய்ப்பது போல் காட்டிக் கொள்ளும் தலைமைகளே இலங்கைதர்தீவின் அரசியலில் நிலைத்திருக்க முடியும். ஆனால் இந்தியாவுக்கு கட்டுப்படுவதோ அல்லது இந்தியாவின் விருப்புக்களை நிறைவு செய்வதோ இலங்கை ஆட்சியாளர்களது இருப்புக்கு விபத்தானதாக அமையும். சுவரேறிய சிங்கத்தை வாளேந்திய சிங்கம் இலங்கை மண்.ணில் காலூன்றாது பாதுகாத்துக் கொள்வதற்கு பெயர்தான் இலங்கைத் தீவின் அரசியல். அத்தகைய கட்டத்தை அடையாளப்படுத்தும் இராமர் பாலம் மோடி பாலமாக மாற்றம் பெற்றிருக்கும் அரசியல் இலங்கை-இந்திய உறவின் இன்னோர் பரிமாணமாகும். இக்கட்டுரையும் அத்தகைய பாலம் அரசியலை (Bridge politics) தேடுவதாக அமையைவுள்ளது.

தென்இந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் பிராந்திய விநியோக மையமாக இலங்கையை மாற்றுவதற்கு இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்த முயற்ச்சிக்கிறோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா அவுஸ்ரேலியாவில் பேர்த் நகரில் 09.02.2024 இல் நடைபெற்ற இந்துசமுத்திர மகாநாட்டில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு குறிப்பிடும் போது 2050 இல் இந்தியா, இந்தோனோசியா போன்ற நாடுகளது தேசிய உற்பத்தி எட்டு மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தம் வகையில் நாடுகளுக்கிடையில் தொடர்புகளை வலுப்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களில் அநேகமானவற்றை அல்லது தேவையானவற்றை மகாணங்களுக்கு வழங்க தயாராக உள்ளோம் என்று ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹா இந்திய ஊடகங்களில் ஒன்றான லியோன் தொலைக்காட்சிக்கு 10.02.2024 அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது 2025 ஆம் ஆண்டு மகாணசபைத் தேர்தலை நடத்துவோம் எனவும் மாகாணங்கள் தமது சொந்தப் பொருளாதாரத்தை வழங்க விரும்புவதாகவும் இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணங்களின் பொருளாதாரத்துடன் போட்டியிடுவன என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த இரு தகவல்களும் சற்று ஆச்சரியமாகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகவும் அமைந்துள்ளது. காரணம் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி இந்தியாவுடன் தரைவழிப் பாதை அமைப்பது பற்றி நீண்டகாலமாக உரையாடிவருகின்றார். ஆனால் அதனை மெற்கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கையிலும் கவனம் கொள்ளாது வெறும் உரையாடல் நகர்வுகளையே முன்வைத்துவருகிறார். அவ்வாறே மாகாணசபைகளுக்கான அதிகாரங்களிலும் ஜனாதிபதியும் அவரது கடந்த கால அரசாங்கங்களும் எப்படி செயல்பட்டிருந்தன என்பது தெரிந்த விடயமே. அத்தகைய சிங்கள பெரும்பான்மைத் தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் ஜனாதிபதி ஏன் இத்தகைய உரையாடல்களை வெளிப்படுத்துகின்றார் என்பது கவனிக்கப்பட வேண்டும். அதனை சற்று விரிவாக புரிந்து கொள்வது அவசியமானது.

முதலாவது, ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்காவின் மேற்குறித்த தகவல்கள் அனைத்தும் அநுரகுமார திசநாயக்காவின் இந்திய விஜயத்திற்கு பின்னர் தீவிரம் பெற்றுள்ளது. அதிகம் இந்தியாவைக் கவரும்விதத்தில் கருத்துக்களை உதிக்கும் ஜனாதிபதியாக மாறியுள்ளார். அதிலும் இந்தியாவை திருப்திப்படுத்தும் முகமாகவே தரைவழித் தொடர்பினையும் மாகாணசபை முறைமையையும் முதன்மைப்படுத்தி வருகின்றார். இவை இரண்டும் இந்தியாவின் இராஜதந்திரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் மகிழ்ச்சியான விடயமாகவே அமையும் என்பதில் ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. கடந்த எழுபது வருடங்களாக இந்தியாவை இவ்வாறே இலங்கைத் தலைவர்கள் கையாண்டுள்ளனர் என்பது ஜனாதிபதிக்கு தெரிந்த விடயமாகும். இவ்வாறு குறிப்பிட்டவுடன் இந்தியத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் திருப்திப்பட்டுக் கொள்வார்கள் எனபதை நன்கு இலங்கை சிங்களத் தலைவர்கள் புரிந்து வைத்;துள்ளனர். 35 வருடங்களுக்கு மேலாக ஒரு மாகாணசபை முறைமையை அமுல்படுத்தாது வைத்துக் கொண்டு இந்தியாவை கையாண்டுவரும் சிங்களத் தலைவர்களின் தந்திரம் சதாரணமானது கிடையாது. 2009 களுக்குப் பின்னர் Connectivity பற்றிய எண்ணத்தை முதன்மைப்படுத்த இந்திய தலைவர்களும் இராஜதந்திரிகளும் முயன்ற போது அதனை சிங்களத் தலைவர்கள் தந்திரமாக உரையாடி இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு சாதாரது கையாண்டுள்ளனர். குறிப்பாக கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் வடக்கு கிழக்கில் இந்தியா மேற்கொள்ளத் திட்டமிட்ட அபிவிருத்திக்கு புறம்பாக கொச்சிக்கும் கொழும்புக்குமான கடல்வழித் தொடர்பையும் பௌத்த மதத்திற்கான உட்கட்டமைப்பு விருத்திக்கான வாய்ப்புக்களையும் குசி மற்றும் அயோத்தி உடனான தொடர்பினையும் வலுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர். வடக்கு கிழக்குடனான இணைப்பு கணிசமாக தோல்விகண்டுள்ளதாகவே தெரிகிறது.

இரண்டாவது, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார என இந்தியாவின் றோ எனும் உளவு அமைப்பு தெரிவித்துள்ளதாக ஜே.வி.பி.இன் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் 08.02.2024 தம்புள்ளயில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய 51 சதவீதமான மக்கள் ஆதரவை அநுராகுமார பெற்றுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி ரணில்விக்கிரமசிங்ஹாவின் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியாக வருவதை இத்தகவல் தடுப்பது மட்டுமன்றி அதனை இந்தியா உருவாக்க முயல்வதாகவே அதிக விமர்சனங்கள் உள்ளன. எதுவாயினும் அநுராவின் இந்திய விஜயமும் இந்தியாவின் அணுகுமுறையும் ரணில்விக்கிரமசிங்ஹாவின் எதிர்கால அரசியல் இருப்புக்கு அபாயமானதாகவே உள்ளது. அதனை இந்தியாவை எதிர்ப்பதன் மூலம் சாத்தியப்படுத்த முடியாதது என்பதை ரணில் விக்கிரமசிங்ஹா தெரிந்துவைத்துள்ளார். அதனாலேயே இந்தியாவை திருப்திப்படத்தும் அறிக்கைகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். பாலம் அமைப்பதும் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுலாக்குவதென்பதும் இந்தியாவுக்கு விருப்பமானதே. அதனை கையில் எடுத்துள்ளார் ரணில்விக்கிரமசிங்ஹா தனது தேர்தல் வெற்றிக்கு. இவ்வாறு இந்தியப் புலனாய்வுத்துறை இலங்கைத் தீவு பொறுத்து பல தகவல்களை வெளியிட்டுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்தும் ஒரு புலனாய்வுத் தகவலை வெளிப்படுத்தியிருந்தது. அதன் உண்மைத்தன்மை எதுவென்பது தற்போது இலங்கைத்தீவிலுள்ள மக்களுக்கு நன்கு தெரிந்தவிடயமாகவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்பது தெரிந்தவிடயம். ஆனால் அது 50 சதவீதத்தை தாண்டுமா என்பது கேள்விக்குரியதே. இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் அடிப்படையில் இடதுசாரிகளுக்கு எதிரானவர்களே. புரட்சிகரமான எண்ணங்களுக்க முற்றிலும் முரணானவர்கள். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் புரட்சிகரமான எண்ணம் ஏற்பட்டால் துடைத்தொழிப்பதில் பின்னிற்கமாட்டார்கள். 1971 ஆம் ஆண்டும் 1989 ஆம் ஆண்டும் சிறந்த சாட்சியங்களாகும்.

எனவே ரணில்விக்கிரமசிங்ஹா தனது தேர்தல் வெற்றிக்காக முன்னெடுத்துள்ள தரைவழிப் பதை அமைப்பதானது இந்தியாவுக்கு வலுவான அரசியலாகும். பாரதீய ஜனதாக்கட்சியும் தனது தேர்தல் வெற்றியை அடைவதற்கு இராமரை அயோத்தியில் நிறுவியுள்ளது. அதன் நீட்சியின் ஒன்றே இராமர் பாலமாகும். ஆத்தகைய பாலத்தை சமாதான காலத்தில் இராமர் கட்டவில்லை என்பதும் பேருக்கான சூழலிலேயே பாலம் கட்டப்பட்டதென்பதும் மறுக்கமுடியாததாகும். இராமர் பாலம் ஐதீகமாக அமைந்தாலும் அது கடலுக்குள் தற்போதும் காணப்படுகிறது என்பதை அமெரிக்காவின் விண்வெளிமையமான நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இத்தகைய பாலம் அமைவதென்பது சீனாவின் ஹம்பாந்தோட்டை மட்டுமல்ல சீனாவின் இலங்கை மீதான இருப்புக்கும் இந்துசமுத்திர நலனுக்கும் அபாயமானதாகவே கருதப்படும். இதனால் பாலம் அமைப்பதென்பது அதிக நெருக்கடியை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் ஏற்படத்தும். அதனால் இந்தியாவின் இலங்கை பொறுத்த கொள்கை அதிக மாற்றத்திற்கு உள்ளாகும் என்ற எதிர்பார்க்கை தவிர்க்க முடியாததாகும். இந்தியாவின் போக்கில் ஏற்படவுள்ள மாற்றங்களே அதனைத் தீர்மானிக்கம். இராமர் பாலம் மோடி பாலமாக மாறுமாயின் இலங்கை அரசியல் மட்டுமல்ல இந்து சமுத்திர அரசியலும் புதிய வடிவத்தை எதிர் கொள்ளும். ஆனால் அநுராகுமாரவின் இந்திய அழைப்பு இந்திய நலன்சார்ந்து இலங்கைத் தீவின் அரசியல் நகரப்போகிறது என்பதை அடையாளப்படுத்தியுள்ளது. ரணில்விக்கிரமசிங்ஹாவின் ஜனாதிபதி கனவு பறிக்கப்படுவதற்கான முகாந்திரம் ஏற்பட்டுள்ளது. அல்லது ரணில்விக்கிரமசிங்ஹாவுடனான இந்தியாவின் பேரம் அதிகரிக்கப் போகின்றது என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதாகவே தெரிகிறது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

Recommended For You

About the Author: Editor Elukainews