அரசை நெருக்கடிக்குள் தள்ளிய அரிசி வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள்..! வர்த்தமானி இரத்து செய்யப்பட்ட பின்னணி இதுதானாம், அடுத்தது என்ன? |

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களின் அழுத்தமே அரசின் தீர்மானத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் நேற்றய தினம் எச்சரித்திருந்தனர்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் அரிசி விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதால், அரிசியை விற்பதில் இருந்து சில வியாபாரிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார அதிகார சபை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த 2 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, அவசர கால அதிகாரங்களின் கீழ் முன்னணி அரிசி ஆலைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) கடந்த 22 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நுகர்வோர் விவகார சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

புதிய சட்டத்தின்படி, நுகர்வோர் விவகார சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் அரிசி விலை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

என தாம் எதிர்பார்ப்பதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுராஜ் ஜயவிக்ரம தெரிவித்திருந்தார்.  இந்தப் பின்னணியில் அரிசி உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்த உள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முதித் பெரேரா தெரிவித்திருந்தார்.

இந்த அழுத்தங்களாலேயே அரசாங்கம் அரிசிக்கான மொத்த, சில்லறை விலைகளை நிர்ணயம் செய்து வெளியிட்ட வர்த்தமானியை இரத்து செய்துள்ளதுடன், கையிருப்பை பேண சுமார் 1 லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews