மன்னாரில் வீதியில் உலர விடப்பட்ட வலையில் சிக்கி கர்ப்பிணி தாய் காயம்(படங்கள் இணைப்பு)

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்கட்டு கொட்டு ,ஜீவபுரம், ஜிம்றோன் நகர் ,சாந்திபுரம் போன்ற கிராமங்களில் ஒரு சில மீனவர்கள் வீதிகளில் தாங்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது வீதிகளில் உலர விடுவதினால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பல முறை மீனவர்களுக்கு அறிவிப்புக்கள் வழங்கப்பட்ட நிலையிலும் பொறுப்பற்ற மீனவர்கள் சிலரின் செயற்பாட்டால் நேற்று சனிக்கிழமை (26) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் விபத்தில் சிக்கி கடுமையான காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக சமூக பொறுப்பின்றி வீதிகளில் வலைகளை உலரவிடும் மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இவ்வாறு வீதிகளில் உலர விடப்பட்ட வலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி கையகப்படுத்துமாறும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்பு பட்ட இரு மீனவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது டன் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் சனிக்கிழமை இடம் பெற்ற விபத்தில் சிக்கிய பெண் நான்கு மாத கர்ப்பிணி என்பதுடன் சிறு குழந்தை ஒன்றும் விபத்தில் சிக்கி காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews