தரக்குறைவான ஊசியாலும் சரியான சிகிச்சை இன்மையாலுமே சுபீனா உயிரிழப்பு – சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு…!

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு உடல் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி காணப்பட்டதால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார்.

இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் ஏற்றிவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்ற எனது தங்கை துடித்துள்ளார். இந்நிலையில் அந்த ஊசி மருந்துக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

பின்னர் மருத்துவர் வந்து “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது தங்கச்சிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா” என்று கேட்டார். ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக கூறினர். பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே தங்கச்சியை அனுப்பி வைத்தனர்.

இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை. முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது.

பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். இரவு எட்டு மணிக்குத்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது.

எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர். பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை என்று கூறினார்.

பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது தங்கச்சி சென்றார். இதன்போதே ஏதாவது எனது தங்கச்சிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை. எனது தங்கச்சிக்கு ஏற்கனவே போட்ட ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு ஒட்டி இருந்தனர்.

பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது.

ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் புதன்கிழமை பரிசோதனை செய்யவில்லை. ஏனென்றால் மெசின் பழுதாகி விட்டதாக கூறினர். இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அழியமுடிகிறது. போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக. எனவே இவ்வாறான இனி எந்த சம்பவங்களும் இனிமேல் நடக்கக்கூடாது. எனது தங்கச்சிக்கு நீதி வேண்டும் என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews