பாடசாலைக்குள் பொலிஸாரை கொண்டுவருதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு.

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தவறிய பொலிஸாரை, பாடசாலைகளுக்குள் வரவழைத்து, மாணவர்களை உள்ளடக்கி ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவை’ நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பாடசாலை அமைப்பில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் உண்மையான விருப்பம் அரசாங்கத்திற்கு இருக்குமானால், நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை  தடுக்க பணியாற்ற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

“பாடசாலையில் போதைப்பொருள் பாவனையை தடுக்க அரசாங்கம் உண்மையில் எண்ணம் கொண்டிருக்குமானால், பாடசாலைக்குள் போதைப்பொருள் வருவதை தடுக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும். போதைப்பொருள் பாடசாலைக்குள் வருவதை தடுக்கும் வேலைத்திட்டத்தை இதுவரை உருவாக்க முடியவில்லை. நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க முடியவில்லை. அதனால் தான் இந்த விடயங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கும் இந்த செயற்பாடுகளை பாடசாலையின் ஊடாக மேற்கொள்வதற்கும் நாங்கள் எதிர்ப்பினை வெளியிடுகின்றோம்.”

தேசிய புலனாய்வுப் பிரிவோடு இணைந்து புதிய சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்ததை அடுத்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய கெடட் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தேசிய கெடட் படையின் வருடாந்த ஹெர்மன் லூஸ் மற்றும் சொய்சா சாம்பியன்ஷிப் – 2023 அணிவகுப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,  பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க புதிய புலனாய்வு பிரிவினூடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  எனக் குறிப்பிட்டிருந்தார்.

“தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் தேசிய சிறுவர் கெடட் கோர்ப்ஸுடன் இணைந்து சமூக புலனாய்வு பிரிவை நிறுவ தீர்மானித்துள்ளோம். அந்த திட்டத்தை இந்த வருடம் ஆரம்பித்தோம். இதற்கமைய, பாடசாலைகளில் இடம்பெறும் தவறான செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களை குறைப்பதற்கும் அகற்றுவதற்கும், அதனை முற்றாக ஒழிப்பதற்கும் இந்த பிரிவை பயன்படுத்த முடியும். மேலும், இளைஞர்களிடம் இருந்து தேசிய வீரர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.”

பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்தால் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தினார். பாடசாலைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் கடமையாற்ற வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்தால், கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இப்போது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் பாடசாலைக்கு வெளியே பணியாற்ற வேண்டும். அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவற்றை பாடசாலைக்குள் கொண்டு வருவதையும், நாட்டுக்குள் கொண்டு வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் வேறு நோக்கம் உள்ளதா என ஆசிரியர் சங்கத் தலைவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“பாடசாலை அமைப்பில் பொலிஸார் அல்லது இராணுவம் தலையீடு செய்யுமானால், இது முற்றிலும் கேலிக்குரியது. இது வேறு நோக்கத்திற்காக நடக்கிறது எனறே நாம் கூற வேண்டும்.”

தேசிய கெடட் படையுடன் இணைந்து அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சமூகப் புலனாய்வுப் பிரிவிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் பிரதான ஆங்கிலப் பத்திரிகையொன்றின்  இணையதளத்தில் வெளியிட்ட செய்தி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews