குற்றச்சாட்டை அரசால் நிரூபிக்க முடியவில்லை….! 3 தமிழர்கள் விடுதலை.

இலங்கையில் பணிபுரிந்த வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வருடங்களுக்கும் மேலாக தடுப்புக்காவலில் இருந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யோகராஜா நிரோஜன், சுப்ரமணியம் சுரேந்திரராஜா மற்றும் கனகரத்தினம் ஆதித்யன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் உத்தரவிட்டுள்ளார்.ஓகஸ்ட் 14, 2006 அன்று, கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போதைய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக இருந்த பசீர் அலி மொஹமட்டின் வாகனம் மீது குண்டு வீசி படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டி, மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் 25 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.நீண்ட விசாரணையின் பின்னர், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் முன்னிலையானார்.  அவரது கூற்றுப்படி, இந்த பிரதிவாதிகள் 2009 இல் கைது செய்யப்பட்டனர் மற்றும் அவர்களுக்கு எதிரான விசாரணை 2012 இல் ஆரம்பமானது.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் 15 ஆண்டுகால இளம் பராயத்தை திருடிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க ஆட்சியாளர்களை மக்கள் கட்டாயப்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews