கொலையாளியே கொலையை விசாரிப்பதுதான் இந்த உலகத்தின் நீதியா? – சிறிதரன் கேள்வி

உள்ளக விசாரணை என்ற பெயரில் கொலையாளியே தான் செய்த கொலைகளை விசாரிப்பதுதான் இந்த உலகின் நீதியா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. பொதுச்செயலாளருக்குக் கூறிய உள்ளக விசாரணை ஒரு நீதியான விசாரணை அல்ல.”

இவ்வாறு சபையில் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 5 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள்,வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச்சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு)சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐ.நா.வில் உரையாற்றவுள்ளார். அவர் ஐ.நா.வின் செயலாளருடனும் பேசியுள்ளார். அப்போது இலங்கையில் காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

இந்த நாட்டிலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றால் அவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் வடக்கில் சகல இடங்களிலிருந்தும் மக்கள் விரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் வரைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள். இவர்களில் பலர் தங்களுடன் வந்த பிள்ளைகளை, கணவன்மார்களை, தாய், தந்தையரை, சகோதர – சகோதரிகளைக் கண்கண்ட சாட்சியமாக ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள்.

ஓமந்தையில் வைத்து இராணுவத்திடம் கண் கண்ட சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்ற கேள்விக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதுதான் இந்தநாட்டின் ஜனாதிபதியின் பதிலா? அப்படியானால் இந்த நாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? அவர்களுக்கு என்ன நடந்தது?

இன்றும் கூட கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட தாய், தந்தையர் தங்களுடைய பிள்ளைகள் வருவார்கள் என்ற ஏக்கத்தோடு இறந்திருக்கின்றார்கள். இதனைவிட ஆயிரக்கணக்கான தாய், தந்தையர் இன்றும்தமது பிள்ளைகளின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் ஐ.நாவுக்கு போய் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நான் காணாமல்போனவர்களுக்கு மரண சான்றிதழ் கொடுக்கின்றேன் என்று கூறுகின்றார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அண்ணா மஹிந்த ராஜபக்ச, அப்போது ஜனாதிபதியாகவிருந்தபோது அப்போதிருந்த ஐ.நா. செயலர் பான் கீ மூனிடம் நாங்கள் நீதி வழங்குகின்றோம், பொறுப்புக்கூறுகின்றோம் என்று கூறினார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

இந்த அரசு மிக மோசமான முறையில் மக்களை பிழையான வழியில் கொண்டு செல்ல முனைகின்றது. நாங்கள் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ளோம்.

2008 ஆம் ஆண்டில் கிளிநொச்சியில் இருந்த மக்கள் இதே ஐ.நா. சர்வதேச நிறுவனங்களுக்கு முன்னால் சென்று எங்களை விட்டுப்போகாதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு அழுதார்கள்.

நீங்கள் போய்விட்டால் எங்களைப் படுகொலை செய்வார்கள். எங்களை இந்த இலங்கை அரசு கொல்லப் போகின்றது. தயவு செய்து போகாதீர்கள் என்று மன்றாடினார்கள் அப்போது பான் கீ மூன் இருந்தார்.

எமது மக்கள் போகாதீர்கள் எங்களை காப்பாற்றுங்கள் என்று கண்ணீரோடு கேட்டார்கள். ஆனால், எங்களை நடுத்தெருவில் விட்டு சென்ற ஐ.நா. சபையின் ஒவ்வொரு சர்வதேச நிறுவனங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

என்ன நடந்தது என்பதனை ஆராய வேண்டும். இதனை நான் இந்த சபையின் ஊடாக தற்போதுள்ள ஐ.நா.வின் செயலரிடம் வினயமாக முன்வைக்கின்றேன்.

இன்று எமது மக்கள் சர்வதேச ரீதியான நீதியான விசாரணை வேண்டுமென கேட்கிறார்கள். ஒரு வெளிப்படையான நீதி விசாரணையை கேட்கிறார்கள். ஏனெனில் சர்வதேச நிறுவனங்களை இந்த அரசே வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. நீங்களும் எங்களை நடுத் தெருவில் விட்டுச் சென்றீர்கள். நாங்கள் அநாதைகளாக கொல்லப்பட்டோம்.

பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லுங்கள் என அரசு கூறியதை நம்பி அங்கு சென்ற மக்களை குண்டுகள், கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகளை வீசி படுகொலை செய்தீர்கள். எமது மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்கள்.

உலகப்பந்தில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் வெட்கித்தலைகுனியக்கூடிய வகையில் பாரிய இனப்படுகொலை இலங்கையின் வடக்கின் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதனை உலகம் ஏற்றுக்கொள்கின்றது.

இவ்வாறான ஒருசூழலில்தான் இன்று ஐ.நா.சபை கூட மாறி விடுமோ என்ற அச்சம் எங்களுக்குண்டு

நாங்கள் ஒவ்வொரு தலைவர்களும் வருகின்றபோது தருகின்ற ஒவ்வொரு உறுதி மொழிகளையும் நம்புகின்றோம். ஏதாவது நடக்கும் என்று நினைக்கின்றோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இந்த நாடு ஜனநாயகத்தை மதிக்கும்நாடு என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இந்த நாடு நீதியான நாடு என்கிறீர்கள். அப்படியானால் இந்த நாட்டில் என்ன நடந்திருக்கின்றது? இழந்த உயிர்களுக்கு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுதானா உங்கள் நீதி?

ஆப்கானிஸ்தானில் அந்த மக்கள் கதறி அழுகின்றபோது விமானம் விட்டு ஏற்றுகின்றார்கள். சர்வதேச ஊடகங்கள் அதனை வெளியே கொண்டு வருகின்றன. ஆனால், நாங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது சர்வதேசம் மௌனம் காத்தது. எங்களுக்கு யாரும் விமானம் அனுப்பவில்லை. யாரும் கப்பல் அனுப்பவில்லை. நாங்கள் இலங்கை இராணுவத்தாலும் இலங்கை படைகளாலும் படுகொலை செய்யப்பட்டோம். அப்போது இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அப்போதைய பாதுகாப்பு செயலராக இருந்தார். அவர்தான் இவ்வளவு விடயங்களுக்கும் தலைமைவகித்தார். ஆகவே, இன்றுள்ள சர்வதேச சமூகம் இதனை ஒரு நேரான வழியிலே சிந்திக்க வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அது எங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்.

உள்ளக விசாரணை செய்கின்றோம் என்கிறீர்கள். இதற்கு தமிழர்கள் தயாராக வேண்டும் என்கிறீர்கள். சுட்டவர்கள் நீங்கள். பொஸ்பரஸ் குண்டுகளை வீசி கொலை செய்தவர்கள் நீங்கள். கொத்தணிக்குண்டுகளை வீசிக்கொன்றவர்கள் நீங்கள். 4 இலட்சம் மக்கள் இருக்கும்போது 70 ஆயிரம் பேரே இருப்பதாகக் கூறி உணவு அனுப்பியவர்கள் நீங்கள். பட்டினியால் கொல்லப்பட்டவர்கள் நாங்கள். குழந்தைகள் கஞ்சிக்காக வரிசையில் நிற்கின்றபோது கொன்றது நீங்கள். அனைத்துக் கொலைகளையும் செய்தது நீங்கள். நீங்களே இந்தக் கொலைகளை விசாரிப்பது என்றால் அது என்ன நியாயம்? கொலையாளியே தான் செய்த கொலைகளை விசாரிப்பது தான் இந்த உலகின் நீதியா? இந்த நீதியை நம் கேட்கவில்லை.

நாங்கள் கேட்பது ஒரு சுயாதீனமான, நியாயமான பாதிக்கப்பட்ட மக்கள் நம்பக்கூடிய இங்கு நடந்த படுகொலைகளை நிரூபிக்கக்கூடிய நேர்த்தியானதொரு விசாரணையே. அந்த விசாரணை ஒரு சர்வதேச விசாரணையாக இருக்க வேண்டும்.

யார் இந்தப் போரில் அழிக்கப்பட்டார்களோ அந்த மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும். அதனால் நீங்கள் விசாரிப்பது அல்ல விசாரணை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐ.நா. பொதுச்செயலாளருக்குக் கூறிய உள்ளக விசாரணை ஒரு நீதியான விசாரணை அல்ல” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews