பனிப்போரில் தமிழ் மக்கள் யார் பக்கம்? அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.

காஸா யுத்தம்  20 நாட்களாக தொடர்கின்றது. இஸ்ரேல் என்னதான் ஆர்ப்பரித்த போதிலும் தரைவழி யுத்தத்தினை அதனால் தொடர முடியவில்லை. தரை வழி யுத்தத்திற்கு இராணுவ ரீதியான, அரசியல் ரீதியான தடைகள் உள்ளன. இராணுவ ரீதியாக ஹமாஸ் இயக்கம் தரையில் உருவாக்கிய கட்டமைப்புக்கள், சுரங்கங்கள், நவீன ஆயுதங்கள், ஸ்புல்லா இயக்கம் என்பன தடைகளாக உள்ளன. அரசியல் ரீதியாக பனிப்போர் அரசியல், முஸ்லீம் நாடுகளின் எதிர்ப்பு உலக மக்களின் பாலஸ்தீனத்திற்கான ஆதரவு என்பன தடையாக உள்ளன. எனவே காஸா நிலைமை ஒரு யுத்த நிறுத்தத்தை நோக்கி செல்வதற்கே வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இது பற்றி கடந்தவாரக் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

முன்னைய காலங்களைப் போல வெறும் யுத்த நிறுத்தமாக இது இருக்கப்போவதில்லை. நிரந்தர தீர்வுக்கான யுத்தநிறுத்தமாக இருக்கப்போகின்றது. அது பாலஸ்தீனம், இஸ்ரேல் என்கின்ற இரு நாட்டுக்கோட்பாட்டை அங்கீகரிப்பதாகவே இருக்கும்.
அமெரிக்கா ஐ.நா.பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த யுத்த நிறுத்த பிரேரணையை ரஸ்யாவும், சீனாவும் தமது மறுப்பானை அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளன. அமெரிக்கா இப்போது காஸா, மேற்குக்கரை என்கின்ற இரு அரசுகள் திட்டத்தை முன்வைத்திருக்கின்றது. இரண்டும் தனித்தனி அரசுகளாக இருப்பதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ளாது. பாலஸ்தீன மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக மேற்குக்கரையில் வாழும் பாலஸ்தீன மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஏதோ ஒரு வகையில் இணைத்த அரசையே ஏற்றுக் கொள்வர். காஸாவுக்கும், மேற்குக் கரைக்குமிடையே நிலத்தொடர்ச்சியை பேணும் வகையில் இடையில் இருக்கும் நிலங்களையும் அவர்கள் கேட்கக்கூடும்.

எனவே மொத்தத்தில் விவகாரம் நிரந்;தர தீர்வை நோக்கி செல்வதற்கே சாத்தியங்கள் உண்டு. இன்று இந்நெருக்கடியை தீர்க்காமல் உலக அமைதியை பேண முடியாது என்ற நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே நிரந்தரத்தீர்வு என்பது ஒரு உலக நிர்ப்பந்தம் எனவும் கூறலாம்.
இந்த வளர்ச்சி ஒரு புறமிருக்க தமிழ்த்தேசிய  சக்திகளிடம் எழும் கேள்வி? காஸா போருக்கு பின்னால் செயற்படுகின்ற அரசியல் தமிழ் மக்களுக்கு ஏதாவது வெளிச்சங்களைத் தருமா? என்பதேயாகும். காஸா போருக்கு பின்னால் இருக்கின்ற பிரதான அரசியல் அண்மைக்காலமாக எழுச்சியடைந்து வரும் பனிப்போர் அரசியல் ரஸ்யா தலைமையிலான அணிக்கும், அமெரிக்கா தலைமையிலான அணிக்கும் இடையே இந்த பனிப்போர் இடம்பெறுகின்றது.

இப்பனிப்போருக்கான ஆரம்ப அடையாளம் சிரியா யுத்தத்தின் போதே தெரியத்தொடங்கி விட்டது. இதனால் சிரியா யுத்தத்தை பனிப்போரின் ஆரம்பம் எனலாம். ஈராக், லிபியாவில், வெற்றிபெற்ற அமெரிக்கா அணியினால் சிரியாவில் வெற்றிபெற முடியவில்லை. அதனைத் தொடர்ந்து வந்த உக்ரைன் போரும் பெரிய வெற்றியைக் காட்டவில்லை. குவாட், பு.20 அமைப்புக்களும் பெரிய வெற்றியைக் கொடுத்தன எனக் கூற முடியாது. பனிப்போர் தொடர்ந்தும் வளர்வதற்கான வாய்ப்புக்களேயுண்டு.

பனிப்போர் அரசியல் தமிழ் மக்களுக்கும் வெளிச்சங்களைத் தருமா? என்பது தான் தற்போதைய கேள்வி பனிப்போர் என்று வந்துவிட்டால் அரசிற்கு ஒரு தரப்பு உதவு செய்தால் மறு தரப்பு போராட்ட இயக்கங்களுக்கு உதவி செய்யும். பிராந்தியத்தின் முக்கியத்துவத்திற்கேற்ப உதவிகளின் அளவு வேறுபடலாம். ஆயுதப்போராட்ட ஆரம்பகாலங்களில் பனிப்போர் நிலவியமையினால் தான் இந்தியா தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத உதவி , பயிற்சி உதவி பின்தள ஆயுத உதவி , பயிற்சி உதவி, பின்தள வசதி உதவி என்பவற்றை செய்ய முன்வந்தது. அப்போது இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அமெரிக்காவுடன் நெருக்கமாக உறவுகளைப் பேணினார். “அமெரிக்காவின் குரல் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் காலூன்றுவதற்கும் முயற்சிகளைச் செய்தார்.

இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியாக இருந்ததினால் தான் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுத , பின்தள உதவிகளைச் செய்தது. பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்தியாவிற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் பணிந்து போனதினாலும் 1991 இல் சோவியத்யூனியன் சிதைவுடன் பனிப்போர் முழுமையாக இல்லாமல் போனதினாலும் இந்தியா தமிழ் மக்களைக் கைவிட்டது .

தென்னாசியாவை பொறுத்த வரை இலங்கை தீவுக்கு சுயாதீனமான இருப்பு கிடையாது. இந்தியாவை சார்ந்து நிற்கும் இருப்பே உண்டு. சார்ந்து நிற்;றலிருந்து இலங்கை பின்வாங்கும் போது இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளும். இலங்கையின் அரசுருவாக்கம் என்பது பெருந்தேசிவாத சிந்தனைகளினால் கட்டியெழுப்பப்பட்ட அரசுருவாக்கம் தான். பெருந்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, தமிழின எதிர்ப்பு என்ற தூண்களிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இது பற்றி முன்னைய கட்டுரைகளிலும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியத் தலையீட்டுக்கு பெருந்தேசியவாத எதிர்ப்பு எப்போதும் உண்டு. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு சென்றதால் இன்று வரை ஐக்கியதேசியக்கட்சியினால் தனித்து ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. 2002 , 2015 ஆகியவற்றில் கூட்டணி ஆட்சி மூலமே மேலெழ முடிந்தது.

எனவே தற்போதைய பனிப்போர் அரசியல் தமிழ் மக்களுக்கு வெளிச்சங்களைக் காட்டுமா? என்பது பனிப்போர் அரசியலில் இந்தியா எந்த அணியின் பக்கம் நிற்;கப்போகின்றது என்பதிலேயே தங்கி நிற்கின்றது. இந்தியா தற்போது வரை தான் எந்த அணி என்பதை இது வரை துல்லியமாக வெளிப்படுத்தவில்லை. அது ஒரு பக்கத்தில் பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றது. இன்னோர் பக்கத்தில் பு.20, குவாட் என்பவற்றுடன் இணைந்து செயற்படுகின்றது. காஸா போர் தொடர்பாக இந்தியா இந்த இரட்டை நிலைப்பாட்டையே வெளிக்காட்டியது. காஸா யுத்தம் தொடங்கியவுடன் இஸ்ரேலுக்கு ஆதரவு என பகிரங்கமாக கூறியது. பின்னர் பாலஸ்தீன மக்களுக்கு உலக ஆதரவு நெருங்கிய போது பாலஸ்தீனம், இஸ்ரேல் என்கின்ற இரு நாட்டுக் கோட்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதார நலன்களுக்கு ரஸ்ய அணி தேவை. பூகோள புவிசார் அரசியல் நலன்களுக்கு அமெரிக்கா அணி தேவை. எனினும் தேசியபாதுகாப்பு நெருக்கடி வந்தால் இந்தியாவினால் இரட்;டை தோணியில் கால் வைக்க முடியாது. ஏதாவது ஒரு அணியின் பக்கம் சார வேண்டிய நிலை ஏற்படும். 1962 இல் இந் நிலையே ஏற்பட்டது. அதுவரை இரண்டு அணிகளிலும் சேராத அணி சேராக் கொள்கையையே இந்தியா பின்பற்றுவதாகக் கூறியது. அணி சேரா இயக்கத்தையும் எகிப்திய அதிபர் நாஸரோடும், யூகேஸ்லேவிய அதிபர் டிட்டோவோடும் இணைந்து நேரு தொடங்கி வைத்தார். 1962 ம் ஆண்டு சீனப்படையெடுப்பின் பின்னர் தான் சோவியத்யூனியன் சார்பு நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. இந்தச்சார்பு நிலை தான் 1972 ம் ஆண்டு பங்காளாதேஷ் உருவாக்கத்தில் இந்தியாவுக்கு கை கொடு;த்தது. இந்த யுத்தத்தின் போது பாகிஸ்தானுக்கு சார்பாக அமெரிக்கா யுத்தக்கப்பலை அனுப்ப இந்தியாவுக்கு சார்பாக சோவியத்யூனியன் யுத்தக்கப்பலை அனுப்பியது.

தேசியப்பாதுகாப்பு நலன்கள் முக்கியத்துவபடும் போது ஏனைய நலன்கள் பின்னே செல்லும் என்பது யதார்த்தமாகும். இந்தியாவுக்கு தற்போது தேசிப் பாதுகாப்பு நெருக்கடி என்பது சீனாவினாலும் பாகிஸ்தானாலுமே உருவாகியுள்ளது. அதுவும் பாகிஸ்தானால் வருகின்ற நெருக்கடிகள் எல்லைகளில் மட்டும் தான். ஆனால் சீனாவால் வருகின்ற நெருக்கடி சுற்றிவர இருக்கின்றது. தவிர பாகிஸ்தானுக்கும், சீனாவுக்குமிடையே தற்போது நல்லுறவு உள்ளது. மாலைதீவு ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கு எதிரானதே! இலங்கையின் நிலையும் திருப்திப்படுவதாக இல்லை. சுருக்கமாகக் கூறின் சீனாவினால் இந்தியா சுற்றிவளைக்கப்பட்டு;ள்ளது எனலாம். பு.20 பிரகடனம் மூலம் இந்தியா – மத்திய கிழக்கு ஆபிரிக்க பாதையை இந்தியா விரும்பி ஏற்றமைக்குக் காரணம் சீனாவின் சுற்றிவளைப்பை முறியடிக்கத்தான். தவிர தற்போதைய பாராதீயஜனதாக்கட்சியிடம் ஒரு முஸ்லீம் எதிர்ப்பும் உண்டு. அதன் இஸ்ரேல் ஆதரவுக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். எனவே பனிப்போர் வளர்ச்சி நிலையில் இந்தியா அமெரிக்கா – மேற்குலகப் பக்கம் நிற்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம் எனலாம்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை சிறீலங்கா அரசுடனும் பெருந்தேசியவாதத்துடனும் சீனா இருப்பதனாலும், தமிழ் நாடு இந்தியாவில் இருப்பதனாலும், புலம்பெயர் மக்கள் மேற்குலக நாடுகளில் வசிப்பதினாலும் ரஸ்ய அணியின் சார்பு நிலையை எடுக்க முடியாது. அமெரிக்க – மேற்குல அணிச் சார்பு நிலையையே எடுக்க முடியும். தமிழ்த்தேசிய சக்திகளில் ஒரு பகுதியினரிடம் அமெரிக்கா – மேற்குலக – இந்திய அணியுடனான கசப்பான அனுபவங்கள் காரணமாக ரஸ்ய அணி பக்கம் சாய்ந்தால் என்ன? என்ற அபிப்பிராயமும் உண்டு. புலம்பெயர் தரப்பில் ஒரு பகுதியினரை ரஸ்ய அணியினர் அணுகியதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்துள்ளன எனினும் ரஸ்ய அணிப்பக்கம் சாய்வது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூற முடியாது. உறவுகளைப் பேணலாம் சார்பு நிலையயை எடுக்க முடியாது.
பெருந்தேசிய வாதத் தரப்பில் இரண்டு அணிகளும் நெருக்கடி வரும் போது பெருந்தேசிவாதத்திற்கு சார்பான நிலைப்பாட்டையே எடுக்க முற்படும்.

ரணில் பெருந்தேசிவாதத்தின் லிபரல் முகமே ஒழிய அவரும் பெருந்தேசியவாதி தான். நெருக்கடி வரும் போது பெருந்தேசிய வாதிகள் சீன அணிப்பக்கமே முழுமையாக சாய்வர். ரணில் அண்மைய சீனாவின் பட்டி – பாதை மாநாட்டில் சீனாவுக்கே பச்சை கொடி காட்டியுள்ளார். எனவே சிங்கள தேசத்தின் முழுமையான சீனச் சார்பு நிலையும் தமிழ் மக்களை அமெரிக்கா – மேற்குலக அணியின் பக்கமே தள்ளி விடுகின்றது.


தமிழ் மக்கள் சார்ந்த அபிலாசைகளில் குறைந்த பட்ச ஆதரவு நிலையை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமே எடுத்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்ற விவகாரத்தை கொண்டு வந்தது அமெரிக்கா தான். கனடாவில் இன அழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டதோடு போர்க் குற்றவாளிகளுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி விசாரணை கோருவதற்கு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ் மக்கள் எந்த அணியின் பக்கம் நிற்;க வேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்றன.
இந்தவிடயம் சர்வதேச விவகாரமாக இருப்பதால் தமிழ்த்தரப்பிடம் இது தொடர்பான காத்திரமான உரையாடல் தேவை. அதனை இப்போதே ஆரம்பிப்பது அதிக பயனுடையதாக இருக்கும்.
தமிழ்த்தேசிய சக்திகள் இதனை கவனத்தில் கொள்வார்களா?

Recommended For You

About the Author: Editor Elukainews