இந்திய – இலங்கை அரசின் திட்டத்திற்குள் சிக்கி பலிக்கடா ஆக வேண்டாம் – இசையமைப்பாளர் சந்தோஷிடம் முன்னணி கோரிக்கை

எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியானது நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இசை நிகழ்ச்சியை அந்த நாட்களில் நடாத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
இன்றையதினம் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தாங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலிவை வெளிக்கொணரும் தங்களின் இசையமைப்பில் உருவான பாடல்களையும், இசையையும் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்களும் கேட்டு இரசித்து மகிழ்கிறோம். அந்த வகையில் உங்களுக்கு ஏராளமான இரசிகர்கள் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
பாரிய இனவழிப்பினை தமிழினம் சந்தித்ததனை நீங்கள் அறிவீர்கள். இவ்வினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களினை நினைவேந்தல் செய்வதன் முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்வீர்கள். இந்தநிலையில், தங்களால் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஒக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளாகிய இதே தினங்களில் 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட நோயாளர்கள் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினரால் கட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தவர் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
அநியாயமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை வருடா வருடம் நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்த துயர்மிகுந்த நாட்களில், நினைவேந்தல்களூடாக அடுத்த சந்ததியினருக்கு தமிழின போராட்டத்தின் நியாயங்கள் சென்றடையும் என நாம் நம்புகிறோம். இதனை மடைமாற்றி இந்நாட்களை இளைஞர்களுக்கான மகிழ்ச்சிகரமான களியாட்ட நாட்களாக மாற்றியமைக்க முயலும் இலங்கை இந்திய அரசுகள், தங்களை பலிக்கடாவாக்க முயல்கிறார்கள்.
இந்நினைவேந்தல் நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி இசை நிகழ்ச்சிகளில் தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ கலந்து கொள்வதானது, அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை அவமதிக்கும் செயற்பாடு என்பதுடன் பேரினவாதத்தால் இன்றும் தடைபெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு துணைநிற்கும் செயற்பாடாகவும் அமைந்துவிடும்.
மேற்படி நினைவேந்தல்களூடாக தமிழினம் அடுத்த சந்ததிக்கு கடத்த முயலும் தமிழின விடுதலை வேட்கைக்கும் எதிரான செயற்பாடாகவும் அமையும். தாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்திருப்பவர் என்னும் வகையில், இந்திய படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் நினைவு தினங்களில் தங்களின் இசை நிகழ்ச்சி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது, இன்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதனை அன்புரிமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இறந்தவர்களை நினைவேந்தும் உரிமையை சர்வதேச சட்டங்களும் இலங்கைச் சட்டங்களும் அனுமதித்துள்ள போதும் , படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு சட்டவிரோதமாக தடைகளை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தரப்புக்கள் , நினைவேந்தல்களுக்கு சட்டரீதியாக தடைகளை ஏற்படுத்த முடியாதபோது, இந்நாட்களைத் தெரிவு செய்து களியாட்ட தினங்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முயற்சிகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் இரசிகத்தளத்தைக் கொண்டிருக்கும் தாங்கள், தமிழ்மக்களின் வலிகளையும், இழப்புக்களுக்கும், தியாகங்களுக்கும் வேதனைகளையும் உணர்ந்துகொண்டு , மதிப்பளித்து குறித்த திகதிகளை மாத்தி பொருத்தமான வேறொரு திகதியில் தங்கள் நிகழ்வை மாற்றியமைக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews