முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி விலகியமை குறித்து சரவணபவன் கருத்து!

சிங்கள – பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலையே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் முன்னெடுக்கவேண்டும். அதிலிருந்து விலக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீதிபதி ஒருவர் செயற்பட்டால் அவ்வாறு செய்வதற்கு இலங்கையின் சிங்கள – பௌத்த பேரினவாத கட்டமைப்பு இடம்கொடாது என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம்தான் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியமை தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் தங்கள் வழிபாட்டுரிமையை நிலைநாட்டப் போராடி வருகின்றனர். நீதிக்கான அந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் நம்பியிருந்தது நீதிமன்றத்தைத்தான். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, இலங்கை சட்டத்துக்குட்பட்டு தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்தியிருந்தார்.
குருந்தூரில் விகாரை அமைக்கப்படக்கூடாது என்பதையும், அதையும் மீறி அமைக்கப்பட்டபோது அதை இடிக்கவேண்டும் என்பதையும், அதன் பின்னர் முன்னைய நிலையில் விகாரையைப் பேணுமாறு பணித்ததையும், இது தொடர்பில் நேரடியாக ஆய்வு செய்யச் சென்ற நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலையிட்டு இடையூறு செய்தமையும், அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் என்ற சிறப்புரிமை கவசத்துக்குள் நின்று நீதிபதி ரி.சரவணராஜா மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தமையும் அதிலும் தமிழ் நீதிபதி என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி வீரசேகர உரையாற்றியமையும் கடந்த காலத்தில் நடந்தேறியவை. ஒரு தடைவ அல்ல இரண்டு தடவைகள் சரத் வீரசேக இவ்வாறு உரையாற்றியிருந்தார்.
நீதியின்பால்பட்டு துணிச்சலாக நீதிபதி ஒருவர் செயற்படும்போது சிங்கள – பௌத்த பேரினவாதம் எவ்வாறு சினம் கொள்ளும் என்பதற்கு இது சிறந்த எடுக்காட்டு. இதுதான் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் நிறுவனங்களினதும் கொள்கை. சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அவர்களைத் தூக்கி மிதிப்பதற்கு சிங்கள தேசம் தயங்காது என்பதற்கு வீரசேகரவின் குரலும் அந்தக் குரலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையோ கண்டிப்போ விடுக்காத சிறிலங்காவின் அரசாங்க கட்டமைப்பும் மிகப் பொருத்தமான உதாரணம்.
இலங்கையில் கட்டமைக்கப்பட்டுள்ள பௌத்த – சிங்கள சித்தாந்த்தத்திலிருந்து அதன் அரச நிறுவனங்கள் வெளிவரப்போவதுமில்லை. தனிநபராக அதற்குச் சவால் விடுத்தால் நீதிபதி சரவணராஜாவுக்கு நேர்ந்ததுதான் நேரும் என்பதுதான் அவர்களின் எச்சரிக்கை.
நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தலால் நாட்டிலிருந்து வெளியேறிமையை தனித்து ஒரு சம்பவமாக நோக்காமல் இலங்கையின் அரச நிறுவனங்கள் சிங்கள – பௌத்த சித்தாந்தத்துக்கு முரணாக இயங்க முடியாதுள்ளதையும் அது எவ்வளவு தூரம் பல்வகைமை உள்ள நாட்டில் பாதிப்பு என்பதையும் சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும், என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews