இரத்தத்தினால் அக்கறை காட்டிய மலையக மக்கள்….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

தலைமன்னாரில் இருந்த மாத்தளை வரை மலையகம் 200 எழுச்சி பாதையாத்திரை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மலையகத்திலிருந்து மட்டுமல்ல வடக்கு–கிழக்கில் இருந்தும் ஏராளமானவர்கள் இப்பாதை யாத்திரையில் கலந்து கொண்டு வருகின்றனர். இவ் எழுச்சி யாத்திரைக்கு ஆதரவு கொடுப்பதற்காக உப யாத்திரைகளும் வடக்கில் இடம் பெற்றுள்ளன. இம்மாதம் 2ம் திகதி முல்லைத்தீவிலிருந்து ஒரு பாதையாத்திரை பரந்தன் சந்திவரை இடம்பெற்றது. அதே போல 3ம் திகதி காலை யாழ்ப்பாணத்தில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. அதே வேளை இதே தினத்தில் வவுனியாவிலும் ஒரு பேரணி நடாத்தப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெறும் இம்முயற்சிகள் மலையக மக்கள் தொடர்பான வடக்கு – கிழக்கு மக்களின் தொடர் அக்கறையைக் காட்டி நிற்கின்றன.

மலையக வடக்கு – கிழக்கு அக்கறை என்பது ஒரு வழிப்பாதையாக இருக்கவில்லை மாறாக இரு வழிப்பாதையாகவே இருந்தது. மலையக மக்களும் வடக்கு – கிழக்கு விவகாரத்தில் தமது தொடர் அக்கறையை காட்டி வந்தனர். அந்த அக்கறைக்கும் சிறப்பான வரலாறு  இருக்கின்றது. இந்த அக்கறை 1950 களிலேயே ஆரம்பித்து விட்டது.

1956ம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து காலி முகத்திடலில் சத்தியாக்கிரப் போராட்டம் ஆனி 05 ம் திகதி இடம்பெற்றது. காலி முகத்திடலில் இடம்பெற்ற இச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மலையக மக்களும் பங்குபற்றினர். பண்டாரநாயக்கா ஏவிய காடையர்களினால் இச்சத்தியாகிரகிகள் தாக்கப்பட்டனர். அமிர்தலிங்கம் உட்பட பலர் காயமடைந்தனர் .

1957 ம் ஆண்டு தை மாதத்தில் இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகளில் ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக சிங்கள “ஸ்ரீ” எழுத்தை பிரயோகிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழரசுக்கட்சி இதனை எதிர்த்து சட்டமறுப்புப் போராட்டத்தை  1957 ம் ஆண்டு  தை மாதம் 19 ம் திகதி ஆரம்பித்தது. யாழ்ப்பணம் திருகோணமலை, வவுனியா மட்டக்களப்பு, மன்னார் என இப்போராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. முதலில் ஒரு நாள் சட்ட மறுப்பாக தமிழ் எழுத்துக்களை பொறித்து வாகனங்கள் செல்லவிடப்பட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக நிரந்தரமாகவே தமிழ் எழுத்தை வாகனத்தில் பொறிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக எல்லா மோட்டார் வண்டி சொந்தக்காரர்களையும் தமிழ் எழுத்தைப் பொறிக்கும்படி வேண்டப்பட்டனர். தமிழரசுக்கட்சியின் தொண்டர்களே தமிழ் எழுத்து பொறித்த தகடுகளை வாகனங்களில் மாட்டினர்.

இப் போராட்டங்களினால் சிங்கள எழுத்தைப் பொறிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. 1957 ம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையினால் இவ்விவகாரம் பெரியளவிற்கு மேலெழவில்லை. 1958ஏப்ரலில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இதன் பின்னர் சிங்கள “ஸ்ரீP” பொறித்த பஸ்வண்டிகள் 1958 ஏப்ரல் 10 இல் வடக்கு – கிழக்கிற்கு அனுப்பப்பட்டன. தமிழரசு கட்சி ஸ்ரீ  எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் சிங்கள ஸ்ரீP பொறித்த இலக்கத்தகடுகளை அகற்றி தமிழ் ஸ்ரீP பொறித்த இலக்கத்தகடுகளை தமிழரசுக்கட்சியினர் மாட்டிய போது அமிர்தலிங்கம் , நல்லையா , சிறீதரன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பெண்களும் பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய போது அவர்களுக்கு குறுகிய கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் இச் ஸ்ரீP   எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக தென்பகுதியில் சிங்களத்தீவிரவாதிகள் தமிழ் எழுத்துக்களை தார் பூசி அழித்தனர். மலையகத்திலும் இவ் அழிப்புச் செயற்பாடுகள் இடம் பெற்றன. பொகவந்தலாவையில்  இவ்வாறு தமிழ் எழுத்துக்கள் அழிக்கப்பட்டபோது தமிழ்த் தொழிலாளர்கள் இதனை எதிர்த்து போராட்டம் நடாத்தினர். இப்போராட்டத்தின் போது பொலீசார் சுட்டதில் பொகவந்தலாவையைச் சேர்ந்த பிரான்சிஸ், ஐயாவு என்கின்ற இரண்டு தொழிலாளர்கள் மரணமடைந்தனர். இக்கொலைகளைக் கண்டித்து 1958 சித்திரை மாதம் 05 ம் திகதி வடக்கு – கிழக்கு எங்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது. வடக்கு – கிழக்கு மக்களின் போராட்டத்தின் மீது மலையக மக்கள் இரத்தத்தினால் அக்கறை காட்டிய முதலாவது நிகழ்வு இது தான்.

1961 ம் ஆண்டு வடக்கு–கிழக்கில் தனிச்சிங்களச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்; செயற்பாட்டை முடுக்கியது. 1961 ம் ஆண்டு ஜனவரி 01 ம் திகதி தொடக்கம் நாடு முழுவதும் தனிச்சிங்களச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது. இதற்காக சிங்கள அரச உத்தியோகத்தர்களும் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டனர். தமிழரசுக்கட்சி அதை எதிர்த்து பாரிய அளவில் போராட்டம் நடாத்த முடிவு செய்தது.

இதன்  முதற்கட்டமாக தமிழரசுக்கட்சியின் தலைவர் செல்வநாயகம் தலைமையில் மக்கள் ஊர்வலமாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு சென்று தமிழில் நிர்வாகம் நடாத்தப்படல் வேண்டும் என கோரி மனு ஒன்றைக்; கையளித்தனர். தொடர்ந்து 1961ம் ஆண்டு தை மாதம் 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழரசுக்கட்சியின் எழாவது மாநில மாநாட்டில் 1961 மாசி 20 ஆம் திகதி தொடக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மாநாட்டு தீர்மானத்தின் படி மாசி 20 ம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1961 ம் ஆண்டு மாசி மாதம் 28 ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும் பங்குனி 04 ம் திகதி திருகோணமலை மாவட்டச் செயலகத்திற்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் விஸ்தரிக்க்கப்பட்டது. திருகோணமலை போராட்டம் பொலீசாரின் தாக்குதலுக்கு உள்ளாகியது. பத்து பேர் வரை காயமடைந்தனர். மூதூர் தொகுதி முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனா.; இத்தாக்குதல் காரணமாக ஏகாம்பரம் பங்குனி 22 ம் திகதி மரணமடைந்தார். தொடர்ந்து போராட்டம் வவுனியா , மன்னார் மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.

தமிழரசு தபால் சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு கிட்டவாக இடம்பெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தை நசுக்குவது என அரசாங்கம் தீர்மானித்தது. 1961 ம் ஆண்டு சித்திரை மாதம் 17 ம் திகதி அவசரகாலசட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதனுடன் இணைந்த வகையில் 48 மணிநேர ஊரடங்குச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டது. இராணுவத்தினர் முதன்முதலாக களத்திற்கு இறக்கப்பட்டனர். யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தின் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். பழனியப்பன் என்ற மலையக வம்சாவழி இளைஞரின் தொடை துளைக்கப்பட்டு மயக்க நிலையில் விடப்பட்டார். பெண் சத்தியாக்கிரகிகள் இராணுவத்தினரால் பலவந்தமாக இராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு பல மைல்களுக்கு அப்பால் தனிமையான இடத்தில் விடப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் , இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மங்கையற்கரசி அமிர்தலிங்கம் உட்பட 74 பேர் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பனாகொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டது. சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டதோடு அதன் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. பத்திரிகை  தணிக்கை அமூலுக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழரசுக்கட்சி தனது வரலாற்றில் நடாத்திய மிகப்பெரிய போராட்டமும் உச்சப்போராட்டமும் இது தான் . மலையக மக்கள் இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளித்தனர்; இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் தொண்டமான் போராட்ட களத்திற்கு நேரடியாகச் சென்று சத்தியாக்கிரகிகளை உற்சாசகப்படுத்தினார். வவுனியா, மன்னார் பகுதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் போராட்டத்தில் நேரடியாகவே பங்குபற்றினர் தமிழரசுக்ட்சியின் தலைவர்களோடு சேர்ந்து வவுனியா மாவட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கிளைத்தலைவர் நடேசபிள்ளையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1961 ம் ஆண்டு சித்திரை மாதம் 24 ம் திகதி தோட்ட தொழிலை அத்தியாவசியசேவையாக்கும் சட்ட விதிகளை அரசாங்கம் பிரகடனம் செய்தது. எனினும் இதனை நிராகரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டதை எதிர்த்து மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் 1961 ம் ஆண்டு சித்திரை மாதம் 25 ம் திகதி இறங்கியது. ஏறத்தாழ ஐந்து லட்சம் தோட்டத்தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கு பற்றினர். இதன் காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளுக்கும் இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. தொண்டமான் தமிழரசுக்கட்சியின் நான்கு அம்சக்கோரிக்கையையும் வேலை நிறுத்த தினத்தன்று அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார்.
1965 ம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி ஏழு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த போது இதே ஆண்டு நிறைவேற்றப்பட்ட டட்லி – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக தமிழரசுக்கட்சியும் அரசுடன் இணைந்து கொண்டது. மு.திருச்செல்வம் உள்;ராட்சி அமைச்சராக பதவியேற்றார். கம்யூனி;ஸ்ட் கட்சியின் பிரமுகர் வி.பொன்னம்பலம் இவ் ஆட்சியை “ஏழரைச்சனியன் ஆட்சி” என வர்ணித்தார். அரசின் பங்காளி என்ற தீர்மானத்திற்கு வந்த பின்னர் தமிழரசுக்கட்சியின் போராட்ட அரசியலும் முடிவிற்கு வந்தது. தமிழ் இளைஞர்கள் தமிழரசுக்கட்சியில்; நம்பிக்கை இழக்கத்தொடங்கினார். கட்சி அரசியலுக்கு அப்பாலான தேசிய அரசியல் என்ற சிந்தனை வலுப்பெற தொடங்கியது. சமஸ்டிக் கோட்பாட்டின் மீதான நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்தது. இளைஞர்கள் “தமிழ் ஈழமே” தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு வந்தனர். 1968 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம் இப்போக்கின் ஆரம்பத்தைக் காட்டியது.
தமிழ் இளைஞர் அரசியலிலும் ஆயுதப்போராட்ட அரசியலிலும் மலையக மக்களின் அக்கறை எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்

Recommended For You

About the Author: Editor Elukainews