குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையை அகற்றிய கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் – கதறும் தந்தை!

வைத்தியசாலை வைத்தியர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு, தனது குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையையும் அகற்றி விட்டதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து நேற்றையதினம் (25) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
 கடந்த 20ஆம் அன்று எனது மனைவியை ஊடுகதிர் படப்பிடிப்பு (ஸ்கான்) செய்வதற்கு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, எனது மனைவிக்கு குழந்தை வளர்ச்சி கூடுதலாக இருக்கிறது. நீங்கள் 12ஆம் திகதி வாருங்கள் என அன்று பார்வையிட்ட வைத்தியரால் கூறப்பட்டது.
பன்னிரண்டாம் திகதி நாங்கள் மீண்டும் அந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வேறொரு வைத்தியர் பார்வையிட்டார். இவ்வாறு பார்வையிட்ட வைத்தியர் “யாரம்மா உங்களை வர சொன்னது? குழந்தைக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை 26ஆம் திகதி வாருங்கள்” என்று கூறினார்.
பிள்ளை பிறப்பு திகதியை விட்டு இரண்டு நாட்கள் அடுத்து 26ஆம் திகதி தரப்பட்டது. 26ஆம் திகதி காலையில் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை எனது மனைவிக்கு மருந்து ஏற்றப்பட்டது. பின்னர் அன்று இரண்டாவது தடவையாக 12 மணிக்கு மருந்து ஏற்றப்பட்டது.
இந்நிலையில் எனது மனைவிக்கு 12 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை இரத்தப்போக்கு ஏற்பட்டது. 7.30 மணிவரை எந்த. வைத்தியரும் அந்த விடுதிக்கு வரவில்லை. இரண்டு தாதியர்கள் மாத்திரமே கடமையில் இருந்தார்கள். பி.ப 5 மணிக்கு எனது மனைவி “இரத்தப்போக்கு ஏற்படுகிறது, துடிப்பு குறைகிறது, வைத்தியரை அழைத்து வாருங்கள், எனது பிள்ளையை காப்பாற்றுங்கள்” என கதறினார். இதனை பார்த்தும் அந்த தாதியர்கள் அலட்சியமாக இருந்தனர்.
7.30க்கு வந்த இரண்டு வைத்தியர்களும் ஆயுதம் மூலம் முயற்சி செய்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் 7.30க்கு சத்திரசிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சத்திர சிகிச்சைக்கு கொண்டு செல்ல முன்னர் குழந்தையின் துடிப்பு நின்றுவிட்டதாக எனது மனைவியால் கூறப்பட்டது.
7.30க்கு சத்திர சிகிச்சைக்கு கொண்டு சென்ற பின்னர் 12.30க்கு தான் வைத்தியர்களால் எனக்கு கூறப்பட்டது “தாயை மட்டும் காப்பாற்றியுள்ளோம். பிள்ளையையும் கர்ப்பப் பையையும் காப்பாற்ற முடியவில்லை. கர்ப்பப்பயை அகற்றி விட்டோம்” என்று.
ஆனால் இது வைத்தியர்களால் ஏற்படுத்தப்பட்ட கொலை என நான் கூறுகின்றேன். எனது குழந்தை இறந்ததற்கும் கர்ப்பப்பை அகற்றப்பட்டதற்கும் கிளிநொச்சி வைத்தியர்களே முழுமையான காரணம்.
குழந்தையின் வளர்ச்சி கூடவாக இருப்பதாக தெரிவித்த வைத்தியர் அவ்வாறு தெரிவித்த தினத்திலிருந்து விடுமுறையில் இருந்துள்ளார். அவர் 26ஆம் திகதி தான் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மீண்டும் வந்துள்ளார். அடுத்ததாக பார்வையிட்ட வைத்தியர் ஏற்கனவே எனது மனைவியை பரிசோதித்த வைத்தியர் விடுமுறையில் இருந்து வரும் திகதியை, அதாவது பிறப்பு திகதிக்கு இரண்டு நாட்கள் கழித்து 26ஆம் திகதி திகதியிட்டு தந்துள்ளார்.
சுகாதார அமைச்சரே வைத்தியர்களுக்கு சட்டங்கள் எதுவும் இல்லையா? வைத்தியர்கள் மீது சட்டங்கள் எந்த விதத்திலும் பாயாதா? எனது குழந்தையின் இறப்புக்கும் மனைவியின் கர்ப்பப்பை அகற்றியமைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதா? இவற்றுக்கு காரணமாக இருந்த வைத்தியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இதுவரைக்கும் இவ்வாறு சம்பவங்கள் நிகழ்ந்த போது எந்த வைத்தியருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இலங்கையில் வைத்தியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் இல்லையா? எமக்கு நிகழ்ந்த இந்த அநீதி இனி எந்த பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது. எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நமக்கு நீதி தரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் நேற்றையதினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews