முறைப்பாடு அளிக்கப்பட்டால் லொஹான் மீது நடவடிக்கை! – அமைச்சர் வீரசேகர.

– இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட லொஹான் ரத்வத்த நேற்று தனது பதவியில் இருந்து விலகினார்.

அவர் மதுபோதையில் தனது நண்பர்கள் குழுவுடன் சிறை வளாகத்துக்குள் நுழைந்தார் எனக் கூறப்படுகின்றது.

அதேநேரத்தில் அவர் அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளைத் துப்பாக்கி முனையில் மிரட்டினார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர, இது தொடர்பாக முறைப்பாடு அளித்தால், சம்பவங்கள் குறித்து அவருக்கு எதிராக தனது அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனக் கூறினார்.

சிறைச்சாலைகள் திணைக்களம் தனது அமைச்சகத்தின் கீழ் வருகின்றது எனக் கூறிய அவர், சிறை வளாகங்களுக்குள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமைச்சால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

“அவர் பயன்படுத்திய துப்பாக்கி, உரிமம் பெற்றதாக நான் நினைக்கிறேன்.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யாராவது முறைப்பாடு அளித்தால், சட்டப்படி நாங்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்” என்று அமைச்சர் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று இராஜாங்க அமைச்சுப் பதவிலியிருந்து விலகியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews