தையிட்டி திஸ்ஸ விகாரையைத் திறக்கத் தீவிர முயற்சி: கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பொலிஸாரால் கைது! (Photos)

யாழ். தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலாலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்துச்  சட்டவிரோதமாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையைத் திறப்பதற்கான முயற்சிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சட்டவிரோத   கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியாருடைய காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசியப்  பேரவையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(22.05.2023) மாலை மீண்டும் குறித்த விகாரைக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஆரம்பமான நிலையில் நேற்றுச்   செவ்வாய்க்கிழமை(23.05.2023) இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

கடந்த-03 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை விகாரை அமைந்துள்ள காணிக்கு மிக அருகில் தனியார் காணியொன்றில் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை-03 மணி முதல் இரவு-07 மணி வரை குறித்த விகாரைக்குச் செல்லும் வீதி முகப்பிலும், அதன் பின்னர் அதனை அண்டிய தனியார் காணியொன்றிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மல்லாகம் நீதிமன்றத்தின் புதிய இடைக்காலக் கட்டளையொன்றைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்குக் காண்பித்துப்  போராட்டக்காரர்களை அங்கிருந்து விலகும் படி பொலிஸார் கோரியிருந்த போதிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாம் நீதிமன்ற உத்தரவை எவ் வகையிலும் மீறவில்லை எனத் தெரிவித்து நேற்று முன்தினம் மாலை-03 மணி முதல் இரவு-07 மணி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை-09 மணி முதல் மேற்படி விகாரைக்கு முன்பாக அமைந்துள்ள தனியார் காணியொன்றில் மல்லாகம் நீதிமன்றக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு அமைதியான  வழியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அப் பகுதிக்கு ஏனைய பொலிஸாருடன் விரைந்து வந்த பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இங்கு போராட்டம் நடாத்த முடியாதென உரத்த குரலில் சத்தமிட்டுக் கூறினார். இதன்போது இது தனியார் காணி எனவும், நாங்கள் நீதிமன்றக் கட்டளைக்குக் கட்டுப்பட்டே போராட்டத்தை நடாத்துகின்றோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்
சுட்டிக்காட்டினர். எனினும், அதற்குப் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மறுப்புத் தெரிவித்தார்.

இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் கடுமையாக நடந்து கொள்ளலாம் என்ற அச்சத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தீவிரச் செயற்பாட்டாளர்  ச.சுதாகரன் காணொளி பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் அதனைத் தடுக்கும் முகமாகப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் இரண்டு பொலிஸார் இணைந்து அவரைக் கைது செய்தனர்.

சமநேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை அங்கிருந்து அசையவிடாது பொலிஸ் பொறுப்பதிகாரி இறுகப் பிடித்திருந்த நிலையில் அவரும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து கஜேந்திரனை நாய் பிடிப்பது போன்று பலவந்தமாக சுமார் நூறு மீற்றர் தூரம் இழுத்துச் சென்று விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே  கொண்டு சென்று போட்டார்கள். அப்போது அவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் ஒரு காலைத் திருகி முறிப்பதற்கு முயற்சி செய்த நிலையில் அவர் உரத்துக் கத்தியமையால் அந்த முயற்சி தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் வடக்கின் செயற்பாட்டாளர் நா.கோபிநாத்தும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதன்பின்னரும் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரனையும் கைது செய்வதற்குப் பொலிஸார் முயற்சி செய்த நிலையில் பெண் பொலிஸ் எவரும் இல்லாமல் தன்னைக் கைது செய்ய முடியாது என அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் பொலிஸார் ஒருவர் அவருக்குத் தடியாலும், மற்றொரு பொலிஸ் அவரது நெஞ்சிலும் தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் விகாரைக்குச் செல்லும் வீதி முகப்பிற்கு வெளியே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியொருவராகத் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் உள்ளிட்டவர்களும் கஜேந்திரனுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிஸார் அங்கிருந்தவர்களைக் கைது செய்வதற்குத் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையவர்கள் அங்கிருந்து அகன்று சென்றுள்ளனர். இதனையடுத்துப் போராட்டம் இடம்பெற்ற தனியார் காணிக்குள் கும்பலாகச் சென்ற பொலிஸார் கஜேந்திரன் மற்றும் சுகாஷை நோக்கி இங்கிருந்து வெளியேறாவிடில் கைது செய்வோமென மிரட்டும் பாணியில் கூறினர்.

இதனையடுத்துக் குறித்த இருவருக்கும், பொலிஸாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றொரு பொலிஸாருடன் இணைந்து நேற்று முற்பகல்-11.30 மணியளவில் சுகாஷைக் கைது செய்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனையும் குண்டுக்கட்டாகப் பொலிஸார் பலர் இணைந்து தூக்கிச் சென்ற நிலையில் கஜேந்திரன் பொலிஸ் அராஜகம் ஒழிக! ஒழிக! என மீண்டும் மீண்டும் உரத்துக் கத்திக் கொண்டு சென்றுள்ளார். இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரியின் திடீர்ப் பணிப்பின் பேரில் கஜேந்திரனைக் கைது செய்வதற்கான முயற்சிகளைக் கைவிட்டுப் பொலிஸார் குறித்த காணியிலிருந்து வெளியேறினர். இதன் பின்னரும் சில நிமிடங்களாக கஜேந்திரன் பொலிஸாருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினார்.

இதனிடையே போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் நின்றிருந்த முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர் ராஜீவ்காந்த், பருத்தித்துறைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் செல்வி.கிரிசாந்தி மதியழகன் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் சுமார் அரைமணித்தியாலங்களின் பின்னர் போராட்டம் இடம்பெற்ற பகுதி வீதியில் வைத்து சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி.கலைவாணி
நிரஞ்சன், வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி ராஜினி செளந்தரநாயகம் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்குப் பகுதிச் செயற்பாட்டாளர் திருமதி.அருள்மலர் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யயப்பட்டனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கஜேந்திரனுக்குக் குடிநீரும், உணவும் வழங்கிவிட்டுச் சென்று கொண்டிருந்த போது கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் தீபன் திலீசனும் பொலிஸாரால் இடைமறித்துக் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews