விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பிரச்சினைகளை நிவர்த்திக்க ஜனாதிபதி நடவடிக்கை

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக, விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற அதிகாரிகளை குறித்த அலுவலகத்திற்காக பெயரிடுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவுறுத்தியதோடு, இந்த வேலைத்திட்டத்திற்கு தனியார் துறையின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், முப்படையினரையும் உள்வாங்கி மேற்படி நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார்.

தேயிலை, தெங்கு, இறப்பர், நெல், கருவா, மீன்பிடி போன்ற துறைகளில் துறைசார் ஆய்வுச் செயற்பாடுகளை அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து மேற்கொண்டு விவசாய நவீனமயப்படுத்தல் செயலகத்தின் வேலைத்திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன் போது அரசாங்க நிறுவனங்களின் வழிகாட்டல்களின் கீழ் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உள்ளுராட்சி சபை அதிகாரிகளினதும் பங்கேற்புடன் முன்னோடிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இயலுமை குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாய நவீனமயப்படுத்தல் செயலகத்தின் செயலாற்றுகை முன்னேற்றம் தொடர்பிலான அறிக்கையொன்றை ஜூலை மாதம் தன்னிடத்தில் கையளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அத்தோடு விவசாயத்திற்கான காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விடயங்களை விவசாய செயலாளர் அலுவலகத்திற்கு அறிவித்த பின்னர் தீர்விற்கான பரிந்துரைகளை தனக்கு தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனநாயக்கவின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள விவசாய நவீனமயப்படுத்தலுக்கான குழுவின் புத்தாக்க செயற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது.

விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் போது அது குறித்த தெரிவுகளை கொண்டிருக்கும் தனியார் துறையின் முக்கியஸ்தர்கள், துறைசார் தெரிவுகளை கொண்ட அரச துறையின் முக்கியஸ்தர்கள் மற்றும் இளையோரின் பங்களிப்பை பெற்றுகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பெருந்தோட்டச் செய்கை, மீன்பிடித்துறை, மீன் வளர்ப்பு , பூக்கள் உற்பத்தி, மரக்கறி, பழங்கள் மற்றும் தானிய வகைகள், பால், முட்டை உள்ளிட்ட அனைத்து தொழில்துறைகளும் நவீன மயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.

2048 அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில் உரிய துறை வர்த்தகர்களை தொடர்புபடுத்திக்கொண்டு அமைச்சு செயலாளர்களின் தலைமையில் நிறுவப்படும் உப குழுக்கள் வாயிலாக கலந்தாலோசித்து எடுக்கப்படும் தீர்மானங்களையும் தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தசந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, உரிய அமைச்சுகளின் செயலாளர்களுடன் அரச மற்றும் தனியார் விவசாய துறைசார் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews